காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி நீலகிரியில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம், ரெயில் மறியலுக்கு முயன்ற 30 பேர் கைது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி நீலகிரி மாவட்டத்தில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஊட்டியில் ரெயில் மறியலுக்கு முயன்ற கம்யூனிஸ்டு கட்சியினர் 30 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-04-04 23:00 GMT
ஊட்டி,

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், உடனடியாக அமைக்கக்கோரியும் தி.மு.க. சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று மு.க. ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இதன்படி தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்ட தி.மு.க. சார்பில் ஊட்டி ஏ.டி.சி. திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ஆர்.கணேஷ் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாநில செயற்குழு உறுப்பினர் முஸ்தபா, ஊட்டி நகர செயலாளர் ஜார்ஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஊட்டி நகர செயலாளர் இஸ்மாயில் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

குன்னூர் நகர தி.மு.க. சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி வி.பி.தெருவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு குன்னூர் நகர செயலாளர் ராமசாமி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை மாவட்ட செயலாளர் பா.மு. முபாரக் தொடங்கி வைத்தார்.

ஆர்ப்பாட்டத்தில் குன்னூர் ஒன்றிய செயலாளர் பிரேம்குமார், மேலூர் ஒன்றிய செயலாளர் உதய தேவன் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதன் பின்னர் இன்று (வியாழக் கிழமை) நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு கோரி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு துண்டு பிரசுரங்களை தி.மு.க.வினர் வழங்கினர்.

கோத்தகிரி அருகே அரவேனு பஜாரில் உள்ள ஜக்கனாரை ஊராட்சி அலுவலகம் முன்பு நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கோத்தகிரி ஒன்றிய செயலாளர் எக்ஸ்போ செந்தில் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் இளித்துரை கா.ராமச்சந்திரன், முன்னாள் ஒன்றிய செயலாளர் வீரபத்திரன் ஜக்கனாரை ஊராட்சி செயலாளர் மணிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் காலம் தாழ்த்தி வருவதை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் தி.மு.க சார்பில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் தமிழகம் தழுவிய முழு அமைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தரும்படி அந்த பகுதி வியாபாரிகளை சந்தித்து தி.மு.க.வினர் வேண்டுகோள் விடுத்தனர். இதில் தி.மு.க. நிர்வாகிகள் கண்ணன், ராஜீ, போஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூடலூர் பழைய பஸ் நிலையத்தில் உள்ள காந்தி சிலை முன்பு தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் நேற்று பகல் 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்குநகர செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் லியாகத் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் பாண்டியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் முன்னாள் நகராட்சி தலைவர் அன்னபுவனேசுவரி, நிர்வாகிகள் சுப்பிரமணி, முருகையா, சின்னவர், பாபு, தாஹீர், ரெனால்டு வின்சென்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி காஞ்சனா செல்வராஜ் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி மத்திய அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, நீலகிரி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஊட்டி ரெயில் நிலையம் முன்பு நேற்று திரண்டனர். இதையொட்டி போலீசார் அங்கு தடுப்புகள் அமைத்தும், கயிறு கட்டியும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் தமிழகத்தை வஞ்சித்து வரும் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பியபடி ரெயில் நிலையத்துக்குள் நுழைய முயன்றனர். அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

பின்னர் ரெயில் மறியலுக்கு முயன்ற மாவட்ட செயலாளர் போஜராஜ், ஊட்டி நகர செயலாளர் ஜெயக்குமார் உள்பட 30 பேரை போலீசார் கைது செய்தனர். 

மேலும் செய்திகள்