சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் 12 பேர் கைது

மத்திய அரசை கண்டித்து சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் 12 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-04-04 23:00 GMT
நல்லம்பள்ளி,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசின் மெத்தனபோக்கை கண்டித்தும், வாகன ஓட்டிகளிடம் சுங்க வரி வசூல் செய்வதை நிறுத்தக்கோரியும், தர்மபுரி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில், நல்லம்பள்ளி அடுத்துள்ள தொப்பூர் சுங்கச்சாவடி முன்பு நேற்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அருண்குமார் தலைமை தாங்கினார். இதில் கட்சி நிர்வாகிகள் அதிகன், துரை மாணிக்கம், ரமேஷ், லோகநாதன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

12 பேர் கைது

போராட்டத்தின் போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும், சுங்கச்சாவடிகளில் சுங்க வரி வசூல் செய்வதை நிறுத்தக்கோரியும் கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த தொப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 12 பேரை போலீசார் கைது செய்தனர். அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக கட்சியின் மாவட்ட செயலாளர் அருண்குமார் உள்பட 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

மேலும் செய்திகள்