காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வக்கீல்கள், கோர்ட்டு புறக்கணிப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற 75 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், கோர்ட்டை புறக்கணித்து வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-04-04 22:30 GMT
திண்டுக்கல், 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நேற்று ரெயில் மறியல் போராட்டம் நடந்தது. அதன்படி திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் ரெயிலை மறிப்பதற்காக, பஸ்நிலையத்தில் இருந்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஊர்வலமாக புறப்பட்டனர். இதற்கு மாவட்ட செயலாளர் சந்தானம் தலைமை தாங்கினார்.

சாலைரோடு, ஆர்.எஸ்.ரோடு வழியாக ரெயில் நிலையத்துக்கு அவர்கள் வந்தடைந்தனர். ஆனால் ரெயில் நிலையத்துக்குள் நுழைய விடாமல் இரும்பு தடுப்புகளை வைத்து போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் ரெயில் நிலைய வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து ரெயில் மறியலில் ஈடுபட முயன்றதாக, இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 70 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் 15 பேர் பெண்கள் ஆவர். இதேபோல, மார்க்சிஸ்ட் (லெனினிஸ்டு) கட்சியை சேர்ந்த 5 பேர் ரெயில் மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர். ரெயில் மறியல் போராட்டத்தையொட்டி, போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் தலைமையில் ஏராளமான போலீசார் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனால் ரெயில் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.

இதேபோல, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திண்டுக்கல்லில் நேற்று, வக்கீல்கள் கோர்ட்டை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கோர்ட்டு முன்பு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு வக்கீல்கள் சங்க தலைவர் பாண்டியராஜன் தலைமை தாங்கினார். செயலாளர் மூர்த்தி, துணை செயலாளர்கள் சரவணக்குமார், வீரப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனே அமைக்க வேண்டும் என்றும், கர்நாடக அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். இதில் ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டனர். வக்கீல்கள் கோர்ட்டை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பணிகள் பாதிக்கப்பட்டன.

மேலும் செய்திகள்