காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ரெயில் மறியல் போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து வேலூர், ஆம்பூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ரெயில் மறியலில் ஈடுபட்ட 60 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-04-04 22:00 GMT
வேலூர்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று வேலூரிலும் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதற்காக இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் வேலூர் கன்டோன்மென்ட் ரெயில் நிலையத்திற்கு வந்தனர்.

ரெயில் மறியலை முன்னிட்டு துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதரன் தலைமையில் ரெயில் நிலையம் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கம்யூனிஸ்டு கட்சியினர், ரெயில் நிலையத்திற்குள் சென்றுவிடாதபடி நுழைவுவாயிலில் தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

காலை 9 மணி அளவில் மாநகர செயலாளர் சிம்புதேவன் தலைமையில் 30-க்கும் மேற்பட்டவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டவாறு ரெயில் நிலையத்திற்குள் செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால் ஒரு சிலர் கட்சி கொடியுடன் ரெயில் நிலையத்திற்குள் ஓடினர்.

அவர்கள் அங்கு அரக்கோணத்திற்கு செல்வதற்காக தயாராக நின்று கொண்டிருந்த பயணிகள் ரெயில் முன்பு அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பின்னர் அவர்களையும், ரெயில் நிலையத்திற்கு வெளியே போராட்டம் நடத்தியவர்களையும் கைது செய்தனர். மாவட்ட செயலாளர் சாமிக்கண்ணு, மாநகர துணைசெயலாளர் லோகேஷ்குமார் உள்பட 30 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆம்பூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா செயலாளர் தேவதாஸ் தலைமையில், ஹசேன் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் டபுள்டெக்கர் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து ஆம்பூர் டவுன் மற்றும் ரெயில்வே போலீசார் 30 பேரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்