கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த கட்சி பிரமுகர் உள்பட 6 பேர் கைது

கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த கட்சி பிரமுகர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 37 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2018-04-03 22:32 GMT
மும்பை,

மும்பை தேவ்னார், கேனா மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா விற்பனை நடந்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவத்தன்று அந்த வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது போலீசார் அங்கு இருந்து 35 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் வீட்டில் இருந்த பாலா பச்சாரி, சுல்தான் செய்யது, ஷாசாத் செய்யது, சபிக் மற்றும் ஒரு சிறுவனை கைது செய்தனர்.

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த சோகைல் செய்யது என்பவர் அந்த வீட்டை வாடகைக்கு எடுத்து பிடிபட்ட 5 பேரின் மூலம் நகரின் பல்வேறு பகுதிக்கு கஞ்சா சப்ளை செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் முக்கிய குற்றவாளியான சோகைல் செய்யதுவை அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவரின் காரையும், அதில், மறைத்து வைக்கப்பட்டு இருந்த 2 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட சோகைல் செய்யது தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரமுகர் என கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் செய்திகள்