காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கடலூரில் அ.தி.மு.க.வினர் உண்ணாவிரதம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கடலூரில் அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர் எம்.சி.சம்பத் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டனர்.
கடலூர்,
சுப்ரீம்கோர்ட்டு அறிவித்தபடி மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்து இருந்தனர். அதன்படி நேற்று அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டத்தில் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரே உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதற்கு அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செம்மலை தலைமை தாங்கி பேசினார். அ.தி.மு.க. கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், தொழில்துறை அமைச்சருமான எம்.சி.சம்பத், அ.தி.மு.க. மகளிர் அணி செயலாளர் சத்யா பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் குமரன் வரவேற்றார்.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைத்தே தீர வேண்டும். ஆனால் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் காவிரி நீரை பெற்று தருவதில் வெற்றி பெறுவார்கள்.
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட செய்தவர் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா. காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க. கூட்டணி வைத்திருந்தபோது காவிரி நீரை பெற்றுத்தர மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை கெடுத்து ஆட்சியை கலைப்பதற்கு மு.க.ஸ்டாலின் முயற்சி செய்து வருகிறார். நாங்கள் போராட்டம் நடத்துவதால் காவிரி மேலாண்மை வாரியம் விரைவில் அமைய உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக அமைச்சர் எம்.சி.சம்பத் பேசுகையில், காவிரி மேலாண்மை வாரிய பிரச்சினைக்கு கருணாநிதிதான் காரணம். 2007-ல் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு வெளியானபோது அதை மத்திய அரசில் அங்கம் வகித்த கருணாநிதி, மத்திய அரசிதழில் வெளியிடாமல் காலம் கடத்தி வந்தார். இதன் மூலம் விவசாயிகளுக்கும், விவசாய தொழிலாளிக்கும் அவர் ஏமாற்றத்தை கொடுத்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை விடமாட்டோம் என்றார்.
போராட்டத்தில் பாண்டியன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கோ.அய்யப்பன், சிவசுப்பிரமணியன், செல்விராமஜெயம், மாநில மருத்துவர் அணி துணை செயலாளர் டாக்டர் சீனிவாசராஜா, நகரசபை முன்னாள் தலைவர் பன்னீர்செல்வம், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் சேவல்குமார், ஒன்றிய செயலாளர்கள் முத்துகுமரசாமி, பழனிசாமி, துணை செயலாளர் மதிவாணன், மாவட்ட துணை செயலாளர் முருகுமணி, அண்ணா தொழிற்சங்க செயலாளர் கே.ஆர்.பாலகிருஷ்ணன், விவசாய அணி செயலாளர் காசிநாதன், மீனவர் அணி செயலாளர் தங்கமணி, ஜெயலலிதா பேரவை செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் ஆறுமுகம், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் பெருமாள்ராஜா, தலைவர் மாதவன், வக்கீல்பிரிவு துணை தலைவர் ராஜசேகர் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் மாவட்ட முன்னாள் ஊராட்சி குழு தலைவர் மல்லிகா வைத்தியலிங்கம், மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர் சங்க தலைவர் பிரகாஷ், கூட்டுறவு சங்க தலைவர்கள் ஆதிபெருமாள், ரவிச்சந்திரன், கே.வி.எஸ்.ராமலிங்கம், முன்னாள் கவுன்சிலர்கள் கந்தன், அன்பு, தமிழ்செல்வன், சர்தார், ராமச்சந்திரன், ஒன்றிய முன்னாள் துணை செயலாளர் ஏழுமலை மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
முன்னதாக உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக அதிகாலையில் இருந்தே மாவட்டம் முழுவதிலும் இருந்து அ.தி.மு.க.வினர் வேன், லாரி, பஸ் போன்ற 100-க்கும் மேற்பட்ட வாகனங்களில் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்துக்கு வந்தனர். இதனால் உண்ணாவிரத பந்தலில் அ.தி.மு.க. தொண்டர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதையடுத்து கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் உண்ணாவிரத பந்தலுக்கு எதிரே உள்ள பழைய கலெக்டர் அலுவலக சாலையிலும் அ.தி.மு.க.வினர் திரண்டு நின்றனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதை வழியாக திருப்பி விடப்பட்டன.