விமான நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் டி.டி.வி. தினகரன் - விவசாய சங்க தலைவர்கள் கைது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து திருச்சி விமான நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய டி.டி.வி. தினகரன் மற்றும் விவசாய சங்க தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-04-03 23:00 GMT
திருச்சி,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திருச்சி விமான நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கம், தமிழக அனைத்து விவசாயிகள் சங்கம் உள்பட பல்வேறு விவசாய சங்கங்கள் இணைந்து அறிவித்து இருந்தன.

இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனும் போராட்டத்தில் கலந்து கொள்ள இருப்பதாக அறிவித்து இருந்தார். அதன்படி நேற்று காலை திருச்சி-புதுக்கோட்டை சாலையில் விமான நிலையம் அருகே அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மற்றும் விவசாய சங்கத்தினர் ஆயிரக்கணக்கானோர் திரண்டு இருந்தனர்.

காலை 11.15 மணி அளவில் டி.டி.வி. தினகரன், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு ஆகியோர் திறந்த வேனில் வந்தனர். பின்னர் விமான நிலையத்தை முற்றுகையிடுவதற்காக நுழைவு வாயிலை நோக்கி ஊர்வலமாக சென்றனர். இதையடுத்து விமான நிலைய நுழைவு வாயில் முன்பு போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், துணை கமிஷனர் சக்திகணேசன், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் உள்பட ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.

அப்போது போராட்டக்காரர்கள் விமான நிலையத்தின் முன்பு போடப்பட்டு இருந்த தடுப்புகளை இடித்து தள்ளி முன்னேறி சென்று

விமான நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களில் சிலர் விமான நிலையத்துக்குள் நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

உடனே அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளு,முள்ளு ஏற்பட்டது. உடனே விமான நிலைய நுழைவு வாயிலை இழுத்து பூட்டினார்கள். அம்மா மக்கள் முன்னேற்ற கழக பெண் நிர்வாகி ஒருவர் விமான நிலைய நுழைவு வாயில் கதவு மீது ஏறி நின்று கோஷம் எழுப்பினார். இதை கண்ட போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் அவரை கதவு மீது இருந்து கீழே இறங்க கூறினார்.

பின்னர் அவர் கீழே இறங்கியதும், போலீசார் அவரை அப்புறப்படுத்தினார்கள். தொடர்ந்து விமான நிலைய நுழைவுவாயில் முன்பு ஆயிரக்கணக்கானோர் திரண்டு நின்று மத்திய அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும் கோஷங்களை எழுப்பினார்கள்.

அப்போது வேனில் நின்றபடி டி.டி.வி. தினகரன் பேசுகையில், “காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும். இந்த போராட்டம் ஏதோ தேர்தல் அரசியலை வைத்து நாம் செய்யவில்லை என்று தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் தெரியும். விவசாய சங்கங்கள் நடத்தும் அனைத்து போராட்டங்களுக்கும் ஆதரவாக இருப்போம். மக்கள் விரும்பாத ஹைட்ரோ கார்பன், மீத்தேன், நியூட்ரினோ போன்ற எந்தவொரு திட்டமாக இருந்தாலும் அதனை எதிர்ப்போம். பூமிக்கடியில் நவரத்தினங்கள் கிடைத்தாலும் அது எங்களுக்கு தேவையில்லை என்று தான் விவசாயிகள் கூறுகிறார்கள்.

நியூட்ரினோ திட்டத்தை கண்டித்து தேனியில் விரைவில் போராட்டம் நடத்த உள்ளோம். ஸ்டெர்லைட் ஆலையை கண்டித்து 8-ந்தேதி கண்டன பொதுக்கூட்டம் நடத்த உள்ளோம். ஆனால் அதற்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். இதையடுத்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கோர்ட்டில் அனுமதி பெற்று நிச்சயம் பொதுக்கூட்டம் நடக்கும்“ என்று கூறினார்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட டி.டி.வி.தினகரன், அய்யாக்கண்ணு, பி.ஆர்.பாண்டியன், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட ஆயிரக்கணக்கானோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை வாகனங்களில் ஏற்றி ஆங்காங்கே உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைத்தனர். பின்னர் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். 

மேலும் செய்திகள்