காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அ.தி.மு.க. உண்ணாவிரத போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நேற்று வேலூரில் அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
வேலூர்,
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் தமிழ்நாட்டில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. சார்பிலும் மாவட்ட தலை நகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. வேலூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதற்காக பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. உண்ணாவிரதத்தில் கலந்துகொள்வதற்காக காலை முதலே அ.தி.மு.க.வினர் வரத்தொடங்கினர்.
காலை 8 மணிக்கே பந்தல் முழுவதும் அ.தி.மு.க.வினர் திரண்டிருந்தனர். உண்ணாவிரத போராட்டத்திற்கு அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆதிராஜாராம் தலைமை தாங்கி பேசினார். அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர் கபில் ஆகியோரும் கலந்துகொண்டு காவிரி பிரச்சினையில் ஜெயலலிதா எடுத்த நடவடிக்கைகள் குறித்து பேசினர். மாலை 5 மணி வரை உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இதில் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும் பேசினர்.
உண்ணாவிரத போராட்டத்தில் வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ., லோகநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் வி.எஸ்.விஜய், முன்னாள் மாவட்ட செயலாளர் மூர்த்தி, ஆவின் தலைவர் வேலழகன், மேற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் பாலச்சந்தர், அவைத்தலைவர் சண்முகம், கணியம்பாடி ஒன்றிய செயலாளர் ராகவன், நெமிலி ஒன்றிய செயலாளர் ஏ.ஜி.விஜயன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் ஜனனி சதீஷ்குமார் உள்பட மற்றும் கிழக்கு, மேற்கு மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.