ராமேசுவரம் கோவில் ஊழியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர்

ராமேசுவரம் கோவிலில் 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கோரிக்கைகள் அடங்கிய அடையாள அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர்.

Update: 2018-04-03 19:51 GMT
ராமேசுவரம்,

தமிழகம் முழுவதும் உள்ள 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்களில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருக்கோவில் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்தநிலையில் தமிழ்நாடு முதுநிலை திருக்கோவில் பணியாளர்கள் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் பணியாற்றும் திருக்கோவில் பணியாளர்கள் நேற்று முதல் வருகிற 6-ந்தேதி வரை 4 நாட்கள் கோரிக்கைகள் அடங்கிய அடையாள அட்டைகள் அணிந்து பணி புரியும் போராட்டம் நடத்தினர்.

இதேபோல ராமேசுவரம் கோவிலில் உள்ள முதுநிலை திருக்கோவில் பணியாளர்கள் கோரிக்கை அடையாள அட்டை அணிந்து பணியாற்றினர். அந்த அட்டையில், அரசுப்பணியாளர்களுக்கு அறிவித்துள்ள 7-வது ஊதியக்குழு சம்பளத்தை காலம் தாழ்த்தாமல் அமல் படுத்த வேண்டும். திருக்கோவில்களில் தற்காலிக பணியாளர்களை நியமிக்கும் ஆணையை இந்து அறநிலையத்துறை ஆணையர் ரத்து செய்ய வேண்டும்.

தமிழகம் முழுவதும் உள்ள இந்து அறநிலையத்துறை கோவில் களில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களை நிரப்பி நிர்வாக நலனை பாதுகாக்க வேண்டும். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி திருக்கோவில் பணியாளர்களுக்கு பணிக்கொடையை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டு இருந்தது.

இதில் கோவிலின் உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், முதுநிலை திருக்கோவில் பணியாளர் சங்க தலைவர் அண்ணாதுரை, துணை தலைவர்கள் ராமமூர்த்தி, கண்ணன், செயலாளர் முனியசாமி, பொருளாளர் கலைச்செல்வன், ஆலேசாகர்கள் ககாரின்ராஜ், கமலநாதன் உள்பட 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் அடையாள அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் வருகிற 6-ந்தேதி வரை நடைபெறும் என்றும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் அடுத்த கட்டமாக தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்