சங்கரன்கோவிலில் பரிதாபம் திருமணம் முடிந்து 6 மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை

சங்கரன்கோவிலில் மது குடிக்கும் பழக்கத்தை மனைவி கண்டித்ததால் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டார். திருமணம் முடிந்து 6 மாதத்தில் இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

Update: 2018-04-02 23:00 GMT
சங்கரன்கோவில்,

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் திரு.வி.க. தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் அசோக்குமார் (வயது 25), சுமை தூக்கும் தொழிலாளி. இவருடைய மனைவி பிரேமா (19). இவர்களுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

அசோக்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் மது குடித்து விட்டு சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. திருமணம் முடிந்து சில நாட்களில் கணவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது தெரிந்ததும் தனது கணவரிடம், மது குடிப்பதை நிறுத்துங்கள் என்று கண்டித்துள்ளார். மாரியப்பனும், அசோக்குமாரை சத்தம் போட்டதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட அசோக்குமார் தனது வீட்டில் தூக்கில் தொங்கினார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அசோக்குமாரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்த புகாரின் பேரில், சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் முடிந்து 6 மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்