தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கலெக்டர் அலுவலகத்தை கிராமமக்கள் முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் அங்கு தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி பண்டாரம்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். சிறிது நேரத்தில் அவர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் சமாதானம் அடைந்த அவர்கள் தர்ணாவை கைவிட்டு அலுவலகத்துக்குள் சென்று கலெக்டர் வெங்கடேசிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
எங்கள் கிராமத்தில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். எங்கள் கிராமம் விவசாயத்தையும், கூலித் தொழிலையும் சார்ந்த பகுதி ஆகும். ஸ்டெர்லைட் ஆலை தொடங்கப்பட்ட பிறகு சுற்றுப்புறச்சூழலும், நிலத்தடி நீரும், விவசாய நிலமும் பாதிப்படைந்து, தற்போது முழுமையாக மாசுபட்டு உள்ளது. எங்கள் ஊரில் ஒவ்வொரு குடும்பத்திலும் யாராவது ஒருவர் புற்றுநோய் உள்ளிட்ட நோய்களால் பாதிப்படைந்து உள்ளனர். இந்த நிறுவனத்தின் கழிவுகள் எந்தவித சுத்திகரிப்பும் செய்யாமல், பாதுகாப்பு இல்லாமல் சுற்றுப்புறங்களில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் சுற்று வட்டார கிராம மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் ஸ்டெர்லைட் நிறுவனம் ஆலையை விரிவாக்கம் செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறது. ஆகையால் அரசு தலையிட்டு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முன்னதாக மனு கொடுக்க சென்றபோது, குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அதிகாரிகள் இல்லாததால் கிராமமக்கள் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் அங்கும் தரையில் அமர்ந்து மீண்டும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை அதிகாரிகள் சமாதானம் செய்தார்கள்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட ஆதித்தமிழர் கட்சி துணை செயலாளர் சுரேஷ்வேலன் தலைமையில் அக்கட்சியினர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் அங்கு ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பின்னர் அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் நச்சு ஆலையால் நீர், நிலம், காற்று மாசு அடைந்து வருகிறது. இதனால் மக்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் வருகின்றன. ஆகையால் மக்களை பாதுகாக்கும் வகையில் மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
தூத்துக்குடி வடக்கு ஒன்றிய ம.தி.மு.க. செயலாளர் சுந்தர்ராஜ் கலெக்டர் வெங்கடேசிடம் கொடுத்த மனுவில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடி மக்களின் எதிர்காலத்துக்கு பெரிய அச்சுறுத்தலாக ஸ்டெர்லைட் ஆலை அமைந்து உள்ளது. இங்கிருந்து வெளிவரும் புகை சுற்றுப்புற சூழலை அடியோடு நாசமாக்கி வருகிறது. மேலும் நிலத்தடி நீரில் அதிக அளவில் நச்சு பொருட்கள் கலந்து உள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை விதிமுறை மீறலுக்காக பலமுறை அபராதம் செலுத்தியுள்ளது. தற்போது இந்த ஆலை விரிவாக்கத்துக்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்து தூத்துக்குடி பகுதி வாழ் மக்களின் நலனை காத்திட வேண்டும். ஸ்டெர்லைட் ஆலைக்கு மாசுகட்டுப்பாட்டு வாரியம் வழங்கிய தடையில்லா சான்றிதழ் 31.3.2018 அன்று முடிவடைந்தது. தற்போது மீண்டும் தடையில்லா சான்று பெற ஸ்டெர்லைட் ஆலை சார்பில் விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது. அந்த ஆலைக்கு தடையில்லா சான்று வழங்கக்கூடாது.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையின் விளம்பர பலகைகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக அகற்றிட வேண்டும்.
தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் வசீகரன் தலைமையில் கட்சியினர் நேற்று காலை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் தொழிற்சாலை தனது வருமானத்தில் 2 சதவீதம் சமூக பங்களிப்பு திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு செலவு செய்ய வேண்டும். இதனை தனக்கு ஆதாயம் தேடும் வகையில் ஸ்டெர்லைட் ஆலையின் விளம்பர பலகைகள் பல இடங்களில் வைக்கப்பட்டு உள்ளன. ஆகையால் மாவட்ட நிர்வாகம் தூத்துக்குடி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் ஸ்டெர்லைட் நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் திருத்தம் செய்து, சட்டரீதியான கடமைகளை மேற்கொண்டு அந்த ஆலையின் அனைத்து விளம்பர பலகைகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் அவர்கள் கூறி உள்ளனர்.