மத்திய அரசை கண்டித்து தஞ்சை மாவட்டத்தில் 16 இடங்களில் அனைத்து கட்சியினர் சாலை மறியல்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தஞ்சை மாவட்டத்தில் 16 இடங்களில் அனைத்து கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற எம்.எல்.ஏ. உள்பட 1,176 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-04-02 23:00 GMT
தஞ்சாவூர்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக விதிக்கப்பட்ட 6 வார கால கெடு முடிவடைந்த நிலையில், மத்திய அரசு மேலும் 3 மாத காலம் அவகாசம் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருப்பது ஏமாற்று வேலை என்றும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காத மாநில அரசை கண்டித்தும் தஞ்சை பழைய பஸ் நிலையம் எதிரே அனைத்து கட்சிகள் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

இதில் நகர செயலாளர் நீலமேகம், தலைமை செயற்குழு உறுப்பினர் து.செல்வம், மாநில மகளிரணி துணைச் செயலாளர் காரல்மார்க்ஸ், திராவிடர் கழக மாவட்ட தலைவர் அமர்சிங், தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார், துணை தலைவர் வக்கீல் அன்பரசன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் உதயகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் நீலமேகம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் திருஞானம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட தலைவர் சொக்கா.ரவி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சாமி.நடராஜன் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

இந்த சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன், மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிமகாலிங்கம் மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் மறியலை கைவிட மறுத்து விட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து அழைத்து செல்வதற்காக மினி பஸ்கள் வரவழைக்கப்பட்டன. பின்னர் மறியலில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்து 2 மினி பஸ்களில் ஏற்றி சென்று தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

பாதிபேரை ஏற்றி செல்வதற்கு மினிபஸ்கள், வேன்கள் இல்லாததால் அவர்கள் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அவசரமாக மற்றொரு மினிபஸ் வரவழைக்கப்பட்டு அவர்களையும் போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. உள்பட மொத்தம் 110 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த மறியல் சுமார் அரை மணி நேரம் நடந்தது.

தஞ்சை புதிய பஸ் நிலையம் முன்பு தி.மு.க.வினர் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மேற்கு ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர் பெஞ்சமின் தலைமை தாங்கினார். பேரூர் செயலாளர் கல்யாணசுந்தரம், நிர்வாகிகள் மாணிக்கம், ரேகா குணசேகரன், சுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அனைவரையும் போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்று தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். 1 பெண் உள்பட 110 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து நெடார், ஒரத்தநாடு பைபாஸ் சாலை, பேராவூரணி, பட்டுக்கோட்டை உள்பட தஞ்சை மாவட்டம் முழுவதும் 16 இடங்களில் சாலை மறியல் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தி.மு.க., திராவிடர் கழகம், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகளை சேர்ந்த 35 பெண்கள் உள்பட மொத்தம் 1,176 பேரை போலீசார் கைது செய்தனர். கும்பகோணம், திருவையாறு தேரடி ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 

மேலும் செய்திகள்