பாலீஷ் போடுவதாகக்கூறி நகை மோசடி செய்த பீகார் வாலிபர்கள் 2 பேர் கைது
வேலூரில் பாலீஷ் போடுவதாகக்கூறி நகை மோசடி செய்த பீகார் வாலிபர்கள் 2 பேரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேலூர்,
வேலூர் காகிதப்பட்டறை நைனியப்பன் தெருவை சேர்ந்தவர் குப்பம்மாள். இவர், கடந்த 30-ந் தேதி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் நகைகளுக்கு பாலீஷ் போடுவதாக கூறியிருக்கிறார்கள். அதைநம்பிய குப்பம்மாள் தான் அணிந்திருந்த 2 பவுன் நகைக்கு பாலீஷ் போடுவதற்காக அவர்களிடம் கொடுத்துள்ளார். நகையை வாங்கிய அவர்கள், ஒரு பாத்திரத்தில் தண்ணீரில் ஏதோ திரவத்தை கலந்து அதில் நகையை போட்டு பாலீஷ் செய்துள்ளனர்.
பின்னர் நகையை குப்பம்மாளிடம் கொடுத்துவிட்டு சென்றுள்ளனர். மாலையில் குப்பம்மாளின் மகன் வீட்டுக்கு வந்துள்ளார். அவரிடம், நகை பாலீஷ் போட்டது குறித்து கூறியிருக்கிறார்.
இதனால் சந்தேகமடைந்த அவர் நகையை எடுத்துச்சென்று எடைபோட்டு பார்த்துள்ளார். அப்போது ஒரு பவுன்தான் இருந்துள்ளது. மர்ம நபர்கள் பாலீஷ் போடும்போது பயன்படுத்திய திரவம் மூலம் ஒரு பவுனை கரையவைத்து எடுத்து சென்றுள்ளது தெரியவந்தது.
இந்த நிலையில் நேற்று காலையில் அதே நபர்கள் நைனியப்பன் தெருவுக்கு வந்துள்ளனர். அவர்களை பார்த்ததும் குப்பம்மாள் மற்றும் சில பெண்கள் சேர்ந்து அவர்களை பிடித்துக்கொண்டனர். மேலும் நகையை மோசடி செய்த ஆத்திரத்தில் அவர்களுக்கு தர்ம அடிகொடுத்துள்ளனர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜ்குமார், ராஜேந்திரன் ஆகியோர் சென்று பிடிபட்ட நபர்களை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சையளித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள், பீகார் மாநிலம் மோகராம்பூர் பகுதியை சேர்ந்த ராகுல்ராம் (வயது 20), சந்தோஷ்குமார் (20) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.