விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் கூட்டுறவு சங்க தேர்தலை முறையாக நடத்த கோரி அரசியல் கட்சியினர் போராட்டம்

விருத்தாசலம், காட்டுமன்னார்கோவிலில் கூட்டுறவு சங்க தேர்தலை முறையாக நடத்த கோரி அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-04-02 22:00 GMT
விருத்தாசலம்,

விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே எடச்சித்தூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இந்த சங்கத்தில் இயக்குனர் பதவிக்கான தேர்தலுக்காக 45 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இதையடுத்து வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, ஆளுங்கட்சியை சேர்ந்த 11 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி அறிவிப்பு பலகையில் ஒட்டினார்.

இதனால் ஆத்திரமடைந்த பா.ம.க. ஒன்றிய செயலாளர் பாக்கியராஜ் தலைமையிலான கட்சியினர் எடச்சித்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கூட்டுறவு சங்க தேர்தலை முறையாக நடத்த கோரி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவல் அறிந்த மங்கலம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல விருத்தாசலம் அடுத்த தொட்டிக்குப்பத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் இயக்குனர் பதவிக்காக 28 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். இதையடுத்து பரிசீலனை செய்யப்பட்ட மனுக்களில் ஆளுங்கட்சியினரை சேர்ந்த 11 பேர் தேர்வு செய்யப்பட்டதாக தெரிகிறது. இதைகண்டித்து பா.ம.க. ஒன்றிய செயலாளர் ஆசைத்தம்பி தலைமையில் பலர் சென்று கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தை பூட்டுப்போட்டு பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

காட்டுமன்னார்கோவில் அடுத்த குப்பங்குழி கூட்டுறவு தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தில் இயக்குனர் தேர்தலுக்கான வேட்புமனு கடந்த 28-ந்தேதி நடந்தது. இதில் அ.தி.மு.க., தி.மு.க., அம்மா மக்கள் முன்னேற்ற கழகதை சேர்ந்த 35 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். ஏப்ரல் 2-ந்தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடந்த 28-ந்தேதி அதிகாரிகள் அ.தி.மு.க.வை சேர்ந்த 8 பேர் வெற்றி பெற்றதாக அறிவித்தனர். இதனால் தி.மு.க. உள்ளிட்ட கட்சியினர் அதிர்ப்தியடைந்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்கள் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் பாலமுருகன் தலைமையில் கூட்டுறவு சங்கத்தை திடீரென முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கூட்டுறவு சங்க தேர்தலை முறையாக நடத்த கோரி கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். இதுபற்றி தகவல் அறிந்த காட்டுமன்னார்கோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பேராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது போலீசாருக்கும், கட்சியினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த வங்கி செயலாளரிடம், தேர்தல் அதிகாரி உடனே வரவேண்டும் இல்லையென்றால் நீதிமன்றத்தை நாடுவோம் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றனர். போராட்டத்தில் ஒன்றிய செயலாளர் விவேகானந்தன், நகர செயலாளர் கோகுல், மாவட்ட துணை செயலாளர் நாராயணமூர்த்தி, நிர்வாகிகள் வெற்றிவேல், முத்துபாண்டியன், ராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்