பா.ஜனதா நிர்வாகி வெட்டப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி இந்து அமைப்பினர் திடீர் தர்ணா

பா.ஜனதா நிர்வாகி அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி இந்து அமைப்பினர் திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

Update: 2018-04-02 22:30 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. செயற்குழு உறுப்பினர் வீரபாகு என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்ம நபர்களால் அரிவாளால் வெட்டப்பட்டு படுகாயம் அடைந்தார். அவர், மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்தநிலையில் இச்சம்பவம் தொடர்பாக உண்மை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று பா.ஜனதா கட்சியினர், இந்துமுன்னணி மற்றும் இந்து அமைப்பினர் ஏராளமானோர் கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர்.

பா.ஜனதா மாவட்ட தலைவர் முரளிதரன், மாநில துணை தலைவர்கள் சுப.நாகராஜன், குப்புராமு, கோட்ட பொறுப்பாளர் சண்முகராஜா, மாநில செயலாளர் பாலகணபதி, மாவட்ட செயலாளர் ஆத்மா கார்த்திக், மாநில செயற்குழு உறுப்பினர் துரைகண்ணன், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி உள்பட இந்து அமைப்பினர் ஏராள மானோர் ஊர்வலமாக கலெக்டர் அலுவலகத்திற்குள் வந்தனர்.

இவர்கள் அனைவரும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வீரபாகு அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர். இதனை தொடர்ந்து கலெக்டர் நடராஜன் நேரில் வந்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவரிடம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீரபாகு வெட்டப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட தலைவர் முரளி தரன் கூறினார்.

அவர்களிடம் மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் நடராஜன் இந்த தாக்குதல் சம்பவத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகளை நெருங்கிவிட்டதாகவும், விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்