சமூக விரோத கூடாரமான மானாமதுரை ரெயில் நிலையம்: ரெயில்வே போலீசார் கண்காணிப்பார்களா?

மானாமதுரை சந்திப்பு ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு இடையூறாக சூதாட்டம், மது அருந்துதல் உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருகின்றன.

Update: 2018-04-02 21:45 GMT
மானாமதுரை,

மானாமதுரையில் உள்ள ரெயில் நிலையம் சந்திப்பு ரெயில் நிலையமாக திகழ்ந்து வருகிறது. இதுமட்டுமின்றி இந்த ரெயில் நிலையம் தான் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு செல்வதற்கு இணைப்பு ரெயில் நிலையமாகவும் உள்ளது. இதனால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வருகை தருகின்றனர். அரசு ஊழியர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள், வியாபாரிகள் என பல்வேறு தரப்பினரும் அதிக அளவில் இந்த ரெயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த ரெயில் நிலையத்தின் அருகே கரிமூட்டம் ஏற்றப்படும் தொழில் நடைபெற்று வருகிறது. இதனால் தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட லாரிகள் இங்கு வந்து கரி மூட்டத்தை ஏற்றிக்கொண்டு பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்கின்றன. இதனால் இந்த பகுதியில் உள்ள சுமை தூக்கும் தொழிலாளர்கள் தங்களது வேலை நேரம் தவிர மற்ற நேரங்களில் இந்த ரெயில் நிலையத்தில் அடைக்கலம் புகுந்து சூதாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

ரெயில் நிலையத்தில் பயணிகள் நடை மேம்பாலம் உள்ளது. இந்த நடைப்பாதை பகுதியில் மாணவர்கள் மற்றும் அரசு வேலைக்கு தயாராகும் இளைஞர்கள் பகல் நேரங்களில் படித்து வருகின்றனர். இந்தநிலையில் இந்த சுமைதூக்கும் தொழிலாளர்கள் சிலர் ஒரு கும்பலாக சேர்ந்துக்கொண்டு நடை மேம்பாலத்தின்கீழ் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்கள் சில நேரங்களில் அவர்களுக்குள்ளேயே தகராறு ஏற்பட்டு மோதிக்கொள்கின்றனர். இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக பெண்களை இது முகம்சுளிக்க வைக்கின்றது.

மேலும் தொழிலாளர்கள் மட்டுமின்றி, அன்னியர்களும் ரெயில் நிலையத்தினுள் புகுந்து தூங்குவது, மது அருந்துவது என சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். எனவே இதுபோன்று சமூக விரோத செயலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரெயில்வே போலீசாருக்கு பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்