கூட்டுறவு சங்கத்தேர்தலை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி: மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

கூட்டுறவு சங்கத்தேர்தலை ரத்து செய்யக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து, மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2018-04-02 22:15 GMT
மதுரை,

நாகர்கோவிலைச் சேர்ந்த ஆர்.குமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

மறவன் குடியிருப்பு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினராக உள்ளேன். இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், அனைத்து கட்சியினரும் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராகச் சேருவதற்காக கூட்டுறவு சங்கத் தலைவர் மற்றும் இயக்குனர்களை சந்தித்தனர். ஆனால், புதிய உறுப்பினர்களை சேர்க்கவில்லை. அதே நேரத்தில் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்களை முன்தேதியிட்டு உறுப்பினர்களாக சேர்த்து வருகிறார்கள். தமிழகத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் உள்ள 95 சதவீத உறுப்பினர்கள் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள்.

எனவே சட்டவிரோதமாக சேர்க்கப்பட்ட அ.தி.மு.க.வினரை நீக்கவும், அனைத்து கட்சியினரையும் உறுப்பினர்களாக சேர்க்கக்கோரியும் கூட்டுறவு சங்கங்களின் சிறப்பு அலுவலர்களுக்கு மனு செய்தோம். ஆனால் நடவடிக்கை இல்லை. இதன்படி பார்க்கும்போது கூட்டுறவு சங்கத் தேர்தல் முறையாக நடக்க வாய்ப்பில்லை. எனவே கூட்டுறவு சங்கத்தேர்தல் தொடர்பாக மார்ச் 12-ந்தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்து, தேர்தல் நடத்த தடை விதித்தும், அனைத்து கட்சியைச் சேர்ந்தவர்களையும் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக சேர்க்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர்அகமது ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு வக்கீல் ஆஜராகி, “கூட்டுறவு சங்கத்தேர்தல் தொடர்பான அனைத்து நடைமுறைகளும் முறையாகப் பின்பற்றப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக சில மனுக்கள் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு அவை தள்ளுபடியும் செய்யப்பட்டன” என்றார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “கூட்டுறவு சங்கத்தேர்தல் பணிகள் முறையாக நடந்து வருவதாக, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதில் கோர்ட்டு தலையிட முடியாது” என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர். 

மேலும் செய்திகள்