பிரபல ரவுடிகள் 2 பேரை போலீசார் சுட்டு பிடித்தனர்

பெங்களூருவில், போலீஸ்காரர்களை தாக்கியதுடன், அவர்களை துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முயன்ற பிரபல ரவுடிகள் 2 பேரை போலீசார் சுட்டுப்பிடித்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.

Update: 2018-04-01 23:07 GMT
பெங்களூரு,

பெங்களூரு கெம்பத்தஹள்ளி பகுதியை சேர்ந்தவர் பரமேஸ் (வயது30). பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை, கொலை முயற்சி உள்ளிட்ட 9 வழக்குகள் உள்ளன. பரமேசின் பெயர் தலகட்டபுரா மற்றும் சுப்பிரமணியபுரா போலீஸ் நிலையங்களில் ரவுடி பட்டியலில் இடம் பெற்றுள்ளது. தலகட்டபுராவில் 2 ஆண்டுக்கு முன்பு நடந்த ஒரு கொலையில் பரமேசுக்கு தொடர்பு இருந்தது. ஆனால் அந்த கொலை வழக்கில் போலீசாரிடம் சிக்காமல் அவர் தலைமறைவாக இருந்தார். இந்த வழக்கில் ரவுடி பரமேசுக்கு கோர்ட்டு கைது வாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டு இருந்தது.

இதையடுத்து, தலைமறைவாக இருந்த ரவுடி பரமேசை கைது செய்ய கடந்த 15 நாட்களுக்கு முன்பு துணை போலீஸ் கமிஷனர் சரணப்பா உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் மைசூருவில் பரமேஸ் தலைமறைவாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே தனிப்படை போலீசார் மைசூருவுக்கு விரைந்தனர். ஆனால் அங்கு பரமேஸ் இல்லை என்பதை போலீசார் உறுதி செய்ததால், பெங்களூருவுக்கு திரும்பினார்கள்.

இந்த நிலையில், நேற்று அதிகாலையில் தலகட்டபுரா அருகே நைஸ் ரோட்டில் ரவுடி பரமேஸ் தனது கூட்டாளியான சந்தோசுடன் காருடன் நிற்பதாக தலகட்டபுரா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே இன்ஸ்பெக்டர் சிவசாமி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றார்கள். போலீசார் வருவதை பார்த்ததும் ரவுடி பரமேஸ் அங்கிருந்து காரில் தப்பி சென்றார். உடனே அவரை, போலீசார் தங்களது வாகனத்தில் பின்தொடர்ந்து சென்றனர். சிறிது தூரத்தில் ரவுடி பரமேஸ் காரை போலீசார் வழிமறித்து நிறுத்தினார்கள்.

அப்போது காரில் இருந்து கீழே இறங்கிய பரமேஸ் தன்னிடம் இருந்த கத்தியால் போலீஸ்காரர்களை தாக்கினார். இதில், போலீஸ்காரர்கள் சுரேஷ், நேமிநாத் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அதே நேரத்தில் சந்தோஷ் தான் வைத்திருந்த துப்பாக்கியால் போலீசாரை நோக்கி 2 ரவுண்டு சுட்டார். இதில், அதிர்ஷ்டவசமாக போலீசாரை குண்டு துளைக்கவில்லை. பின்னர் அங்கிருந்து காரில் ஏறி தப்பி செல்ல பரமேஸ், சந்தோஷ் முயன்றார்கள்.

இந்த நிலையில், இன்ஸ்பெக்டர் சிவசாமி தன்னிடம் இருந்த துப்பாக்கியால் 2 பேரையும் நோக்கி 2 ரவுண்டு சுட்டார். இதில், பரமேஸ் மற்றும் சந்தோஷ் ஆகியோரின் காலில் தலா ஒரு குண்டு துளைத்தது. இதனால் 2 பேரும் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து துடிதுடித்தார்கள். உடனே 2 பேரையும் போலீசார் பிடித்து கைது செய்தார்கள். பின்னர் அவர்கள் விக்டோரியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்கள். அங்கு அவர்கள் 2 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

அதுபோல, பரமேஸ் தாக்கியதில் படுகாயம் அடைந்த போலீஸ்காரர்கள் சுரேஷ், நேமிநாத் ஆகியோர் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். முன்னதாக சம்பவம் நடந்த பகுதியை துணை போலீஸ் கமிஷனர் சரணப்பா பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.

பின்னர் துணை கமிஷனர் சரணப்பா நிருபர்களிடம் கூறுகையில், “பரமேஸ் பிரபல ரவுடி ஆவார். அவர் மீது 9 வழக்குகள் உள்ளன. அவரது கூட்டாளியான சந்தோசும் ரவுடி ஆவார். 2 பேரின் பெயர்களும் தலகட்டபுரா போலீஸ் நிலையத்தில் ரவுடி பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது. அவர்கள் 2 பேரையும் பிடிக்க முயன்றபோது, போலீஸ்காரர்களை கத்தியால் தாக்கியதுடன், துப்பாக்கியால் சுட்டும் கொல்ல முயன்றனர். இதனால் 2 ரவுடிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து ஒரு துப்பாக்கி, கார் மற்றும் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன“ என்றார்.

இதுகுறித்து தலகட்டபுரா போலீசார், கைதான ரவுடிகள் பரமேஸ், சந்தோஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். போலீஸ்காரர்களை தாக்கியதுடன், அவர்களை சுட்டுக்கொல்ல முயன்ற 2 ரவுடிகளை சுட்டுப்பிடித்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்