காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மாட்டோம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மாட்டோம் என மத்திய அரசு உறுதி அளித்துள்ளதாக தேவேகவுடா கூறினார்.

Update: 2018-04-01 23:01 GMT
பெங்களூரு,

முன்னாள் பிரதமரும், ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவருமான தேவேகவுடா மண்டியா மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது.

மண்டியா மாவட்டத்தில் கட்சியை விட்டு விலகிய செலுவராயசாமிக்கு மாற்று தலைவராக புட்டராஜூவை வளர்க்க நான் திட்டமிட்டுள்ளேன். இந்த தொகுதியில் புட்டண்ணய்யாவின் மகன் தர்ஷனுக்கு நாங்கள் ஆதரவு வழங்க மாட்டோம். பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் மந்திரி ஹாலப்பா அக்கட்சியில் இருந்து விலகுவதாக கூறப்படுகிறது.

அவர் எங்கள் கட்சியில் சேருவது குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை. ஒருவேளை அவர் எங்கள் கட்சிக்கு வந்தால் அதுபற்றி ஆலோசிப்போம். இந்த விஷயத்தில் குமாரசாமி முடிவு எடுப்பார். மேல்கோட்டையில் புட்டராஜூ தான் எங்கள் கட்சியின் வேட்பாளர். இதுபற்றி நாங்கள் ஏற்கனவே முடிவு செய்துவிட்டோம். தேர்தலில் வெற்றி பெற்று குமாரசாமி முதல்-மந்திரி ஆவது உறுதி. மோடி, அமித்ஷாவின் தந்திரம் இங்கு எடுபடாது. இவ்வாறு தேவேகவுடா கூறினார்.

அதைத்தொடர்ந்து பாண்டவபுராவில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசியதாவது.

நான் இருக்கும் வரை உழைத்து இந்த கட்சியை காப்பாற்றுவேன். நான் இந்த பூமியில் இருப்பது நிரந்தம் அல்ல. குமாரசாமிக்காக கட்சியை வளர்க்க வேண்டாம். இந்த மாநிலத்தின் நிலம், நீரை காப்பாற்ற இந்த கட்சியை ஆதரியுங்கள். காவிரி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை சிலர் இனிப்பு வழங்கி கொண்டாடினார். அதன் பின்விளைவுகள் என்ன என்பது அவர்களுக்கு தெரியவில்லை.

இன்னும் நான் உயிரோடு தான் இருக்கிறேன். காவிரியில் நமக்கு 280 டி.எம்.சி.(ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) கிடைத்தும் எனக்கு திருப்தி அளிக்கவில்லை. காவிரியில் இன்னும் 40 டி.எம்.சி. நீர் நமக்கு கிடைக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கூடாது என்று மத்திய மந்திரி நிதின் கட்காரியிடம் கோரிக்கை விடுத்தேன். அந்த வாரியத்தை அமைப்பது பற்றிய எந்த திட்டமும் இல்லை என்று நிதின் கட்காரி மத்திய அரசு சார்பில் என்னிடம் உறுதி அளித்தார்.

எனக்கு எந்த சாதியும் இல்லை. நாட்டுக்கு சோறு கொடுக்கும் விவசாயிகளை காப்பாற்ற வேண்டியது அவசியம். விவசாயிகளுக்கு நிம்மதி கிடைக்க வேண்டும். உழைக்கும் விவசாயிகளுக்கு நீர்ப்பாசன வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். எனது கடைசி மூச்சு இருக்கும் வரை விவசாயிகளுக்காக போராடுவேன்.

எங்கள் கட்சியை பா.ஜனதாவின் ‘பி டீம்‘ என்று காங்கிரஸ் கூறுகிறது. கூட்டணி ஆட்சியில் சோனியா காந்தியை சம்மதிக்க வைத்து சித்தராமையாவை துணை முதல்-மந்திரி ஆக்கினோம். நான் அன்பால் சித்தராமையாவை சித்தராமு என்று அழைத்தேன். ஆனால் அவர் இன்று பெரியவராகிவிட்டார்.

விவசாயிகளுக்கு தண்ணீர் கொடுத்தாலே போதும். அவர்கள் தங்கத்தையே விளைவிப்பார்கள். சாப்பாடு தாருங்கள் என்று சித்தராமையாவிடம் மக்கள் கேட்கவில்லை. உழைப்பதற்கு வேலை தாருங்கள் என்று தான் கேட்கிறார்கள். லிங்காயத் சமூகத்தை உடைத்தது தான் சித்தராமையாவின் சாதனை. இந்த முறை மண்டியா மாவட்டத்தில் 7 தொகுதிகளையும் ஜனதா தளம்(எஸ்) கைப்பற்றும். இவ்வாறு தேவேகவுடா கூறினார்.

மேலும் செய்திகள்