உடலில் பாலித்தீன் பையை சுற்றி வாலிபர் எரித்துக்கொலை போலீசார் விசாரணை

கன்னியாகுமரி அருகே உடலில் பாலித்தீன் பையை சுற்றி வாலிபர் எரித்துக்கொலை செய்யப்பட்டார். காதல் விவகாரத்தில் இந்த பயங்கரம் நடந்ததா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2018-04-01 22:15 GMT
அஞ்சுகிராமம்,

கன்னியாகுமரி அருகே உள்ள பொற்றையடியில், கண்டு கிருஷி குளம் உள்ளது. இந்த குளத்தின் கரையில் ஒரு வாலிபர் உடல் கருகி  பிணமாக கிடந்தார். இதை நேற்று காலையில் குளத்தில் குளிக்க சென்றவர்கள் பார்த்து, அஞ்சுகிராமம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது அங்கு 30 முதல் 35 வயதுக்கு உள்பட்ட வாலிபர் எரித்துக்கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரிய வந்தது. மேலும் பாலித்தீன் பை உடலோடு உருகி ஒட்டி இருந்தது.

இதுபற்றி தகவல் அறிந்ததும், சம்பவ இடத்துக்கு போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் விரைந்து சென்று பார்வையிட்டார். துணை போலீஸ் சூப்பிரண்டு வேணுகோபால், இன்ஸ்பெக்டர்கள் செல்வம், ஜெயச்சந்திரன், சப்–இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

கொலை செய்யப்பட்ட வாலிபரின் உடலை அடையாளம் காண முடியவில்லை. கை–கால்கள் கட்டப்பட்ட தடம் இருந்ததாக கூறப்படுகிறது. எனவே அவரை வேறு இடத்தில் வைத்து அடித்து உதைத்து, கை–கால்களை கட்டி கடத்தி கொண்டு வந்து, பாலித்தீன் பையை உடலில் சுற்றி தீ வைத்து எரித்து கொலை செய்து இருக்கலாம் என தெரிகிறது.

 மேலும் அவரது கையில் ‘ஆர்யா ஒன்லி யு மை ஹார்ட்‘ என ஆங்கிலத்தில் பச்சை குத்தப்பட்ட வாசகமும் தெரிந்தது. அந்த வாசகம் தீ வைத்து அழிக்கப்பட்டதாக தெரிகிறது. எனவே காதல் விவகாரத்தில் இந்த பயங்கர கொலை சம்பவம் நடந்ததா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். வாலிபரின் உடல் பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுதொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் கூறியதாவது:–

“பிணமாக கிடந்த வாலிபர் யார்? அவரை கொலை செய்தவர்கள் யார்? காரணம் என்ன? என்பது குறித்து விசாரித்து வருகிறோம். கொலை செய்யப்பட்டவர் தமிழகத்தை சேர்ந்தவரா? கேரளாவை சேர்ந்தவரா? என்பது பற்றியும் விசாரணை நடந்து வருகிறது. மேலும் கொலை செய்யப்பட்டவரை அடையாளம் கண்டுபிடிக்கவும், குற்றவாளிகளை பிடிக்கவும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன“

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்