தொடர் விடுமுறையால் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

தொடர் விடுமுறையால் ஒகேனக்கலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை நேற்று அதிகரித்தது.

Update: 2018-04-01 22:30 GMT
பென்னாகரம்,

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த சில மாதங்களாக தண்ணீர் வரத்து குறைந்து உள்ளது. ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் மிதமான அளவில் தண்ணீர் கொட்டுகிறது. கடந்த சில வாரங்களாக ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருகை வழக்கத்தைவிட குறைந்தது.

இந்த நிலையில் மகாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி மற்றும் வார விடுமுறை நாட்கள் என 4 நாட்கள் தொடர் விடுமுறை வந்ததால் கடந்த 2 நாட்களாக ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருகை சற்று அதிகரித்தது. நேற்றும் காலை முதலே திரண்ட சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லின் இயற்கை அழகை கண்டுகளித்தனர்.

மீன் வறுவல்

அருவிகளில் குளிக்க கணிசமானோர் வந்ததால் எண்ணெய் மசாஜ் தொழிலாளர்கள் சுறுசுறுப்படைந்தனர். சுற்றுலா பயணிகளில் பலர் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர். ஒகேனக்கல்லில் மீன் விற்பனையும் நேற்று சூடுபிடித்தது. கடைகளில் விற்ற மீன் வறுவல்களை சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வாங்கி சாப்பிட்டனர். முதலை பண்ணை, வண்ண மீன் காட்சியகம் ஆகியவற்றையும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். 

மேலும் செய்திகள்