“காவிரி மேலாண்மை வாரியம் நிச்சயம் அமையும்” அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நம்பிக்கை

காவிரி மேலாண்மை வாரியம் நிச்சயம் அமையும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Update: 2018-04-01 23:00 GMT
மதுரை,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அ.தி.மு.க. சார்பில் நடைபெறவுள்ள உண்ணாவிரதம் போராட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது. புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் நீதிபதி, பெரியபுள்ளான், ஏ.கே.போஸ், மாணிக்கம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தமிழரசன், முத்துராமலிங்கம், மாவட்ட துணை செயலாளர் அய்யப்பன், நிர்வாகிகள் நிலையூர் முருகன், வக்கீல் ரமேஷ், வெற்றிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில்,”மத்திய அரசை எதிர்த்து பேசி மக்களை நடுத்தெருவில் நிற்க வைக்கப் போவதில்லை. நயமாக பேசினாலும் காரியத்தை சாதிப்பதில் உறுதியாக இருக்க வேண்டும். எனவே பிரச்சினைகளை பொறுமையாக கையாளுகிறோம். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என நேரிலும், கடிதம் மூலமும் வலியுறுத்தியுள்ளோம். நிச்சயம் காவிரி மேலாண்மை வாரியம் அமையும். முல்லை பெரியாறு பிரச்சினையில் தீர்வு கண்டதுபோல், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதிலும் தீர்வு காண்பதற்கு அ.தி.மு.க. தொண்டர்கள் இந்த போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தி காட்ட வேண்டும்.” என்றார். 

மேலும் செய்திகள்