காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி மாவட்டத்தில் 3 இடங்களில் தி.மு.க. சாலை மறியல், 276 பேர் கைது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி மாவட்டத்தில் 3 இடங்களில் தி.மு.க.வினர் சாலை மறியல் செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 276 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-04-01 22:45 GMT

கடலூர்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும் நகர செயலாளர் கே.எஸ். ராஜா தலைமையில் முன்னாள் எம்.எல்.ஏ. இள.புகழேந்தி முன்னிலையில் தி.மு.க.வினர் கடலூர் நகர தி.மு.க. அலுவலகத்தில் இருந்து கட்சி கொடிகளை கையில் ஏந்தி டவுன்ஹால் நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

அவர்கள் தலைமை தபால் நிலையம் அருகே சென்ற போது திடீரென சாலையின் குறுக்கே அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அவர்கள் கோ‌ஷம் எழுப்பினர். இதனால் கடலூர்–புதுச்சேரி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது பற்றி தகவல் அறிந்து வந்த கடலூர் புதுநகர் போலீசார் மறியலில் ஈடுபட்ட கே.எஸ்.ராஜா, இள.புகழேந்தி, மாவட்ட அவைத்தலைவர் து.தங்கராசு, பொருளாளர் குணசேகர், தொ.மு.ச. மண்டல தலைவர் பழனிவேல், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் நடராஜன், நகர துணை செயலாளர் சுந்தரமூர்த்தி, மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் பாலாஜி, மாவட்ட பிரதிநிதி கணேசன், விஜயசுந்தரம், தலைமை கழக பேச்சாளர் கு.வாஞ்சிநாதன், கல்யாணி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி குளோப், மாவட்ட திராவிடர் கழக தலைவர் சிவகுமார் உள்ளிட்ட 71 பேரை கைது செய்து, அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்

விருத்தாசலம் கடை வீதியில் மேற்கு மாவட்ட செயலாளர் கணேசன் எம்.எல்.ஏ. தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதில் நகர செயலாளர் தண்டபாணி, துணை செயலாளர் ராமு, முன்னாள் எம்.எல்.ஏ. குழந்தை தமிழரசன், மாணவரணி அமைப்பாளர் வக்கீல் அருண்குமார், வக்கீல் ரவிச்சந்திரன், இளையராஜா, பொன்கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட கணேசன் எம்.எல்.ஏ. உள்பட 100 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெய்வேலி ஆர்ச் கேட் எதிரில் சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தலைமையில் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ஞானமணி, பொதுக்குழு உறுப்பினர் தண்டபாணி, நெய்வேலி பொறுப்புக்குழு உறுப்பினர் பக்கிரிசாமி, ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்பட தி.மு.க.வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. உள்பட 105 பேரை போலீசார் கைது செய்தனர். மாவட்டத்தில் 3 இடங்களில் நடந்த மறியல் போராட்டத்தில் 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 276 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்