மனித பரிணாம அருங்காட்சியகம்

உலகில் பல்வேறுவிதமான அருங்காட்சியகங்கள் இருக்கின்றன. ஆனால் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள மனித பரிணாம அருங்காட்சியகம் மிகவும் வித்தியாசமானது.

Update: 2018-04-01 09:37 GMT
மனித பரிணாம அருங்காட்சியகத்தில் மனித பரிணாமத்தின் பலநிலை வளர்ச்சிகள், பல்வேறு காலகட்ட அடிப்படையில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள் சான்றுகள் மூலம் வகைப்படுத்தப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் மனிதன் பயன்படுத்திய உபகரணங்கள், கல்லில் இறுகிய கடந்த கால பதிவுகள் போன்றவற்றை உள்ளடக்கிய இந்த அருங்காட்சியகம், வரலாற்று ஆய்வாளர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் ஒரு மிகச்சிறந்த தலமாக விளங்குகிறது.

1878-ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம், 1937-ம் ஆண்டில் மனிதனின் முழு வரலாற்றையும் உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட்டது.

இங்கு, உலகின் பல பாகங்களில் வசிக்கும் வெவ்வேறு இனமக் களின் தோற்றம், அவர்களின் மூதாதையர் போன்றவற்றை மிக நுட்பமான ஆய்வுகளின் மூலம் வகைப்படுத்தியுள்ளனர். அத்துடன் நில்லாமல், அந்த அந்த இன மக்கள் எந்த மாதிரியான வாழ்க்கை வாழ்ந்தார்கள், எப்படிப்பட்ட உபகரணங்களைப் பயன்படுத்தினார்கள் என்பதையும் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

அந்தந்த காலத்தில் அவர்களின் ஜனத்தொகை எவ்வளவாக இருந்தது, பின்னர் அவர வர்களின் ஜனத்தொகையில் ஏற்பட்ட மாற்றத்துக்கான காரணம் என்ன என்பதெல்லாம் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

குரங்கில் இருந்து மாற்றமடையத் தொடங்கிய முதல் மனித தலைமுறையின் உண்மையான எலும்புக்கூடுகள் கூட இங்கு காட்சிப் படுத்தப்பட்டிருக்கின்றன.

மனித பரிணாமச் சான்றுகள் மட்டுமின்றி, பண்டைய மனிதர்கள் பயன்படுத்திய எண்ணற்ற பொருட்களும் இங்கு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

மனிதர்களாகிய நாம் நம் வரலாற்றைத் தெளிவாக அறிந்துகொள்ளச் செல்லவேண்டிய இடம், இந்த மனித பரிணாம அருங்காட்சியகம்!

மேலும் செய்திகள்