படிப்புக்கு விருந்து

10-ம் வகுப்பு தேர்வு எழுதியிருக்கும் தன்னுடைய மகன் தேர்வில் வெற்றி பெற ஆசீர்வதிக்குமாறு கிராம மக்களை அழைத்து விருந்து வைத்து உப சரித்திருக்கிறார், விவசாயி ஒருவர். அவருடைய பெயர் ரஜப் அலி.

Update: 2018-04-01 05:41 GMT
10-ம் வகுப்பு தேர்வு எழுதியிருக்கும் தன்னுடைய மகன் தேர்வில் வெற்றி பெற ஆசீர்வதிக்குமாறு கிராம மக்களை அழைத்து விருந்து வைத்து உப சரித்திருக்கிறார், விவசாயி ஒருவர். அவருடைய பெயர் ரஜப் அலி. ஏழை விவசாயியான இவர் மேற்கு வங்காள மாநிலத்திலுள்ள முர்ஷிதாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர். இவருடைய மகன் ஷமிம் ஷேக். ரஜப் அலியின் குடும்பத்தில் ஷமிம்தான் முதன் முதலாக 10-ம் வகுப்பு பொது தேர்வு எழுதும் வாய்ப்பை பெற்றிருக்கிறான். தன்னுடைய மகன் நல்லபடியாக தேர்வு எழுதி பெற்றி பெற்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பது ரஜப் அலியின் ஆசையாக இருக்கிறது. அதற்கு கிராமத்தினரின் ஆசீர்வாதமும் கிடைக்க வேண்டும் என்று விரும்பினார். வீட்டில் நடக்கும் சுப காரியத்திற்கு உறவினர்களை அழைத்து உபசரித்து ஆசீர்வாதம் பெறுவதுபோல மகன் படிப்பு விஷயத்தையும் வீட்டு விசேஷமாக மாற்றிவிட தீர்மானித்தார்.

10-ம் வகுப்பு தேர்வு எழுதியிருக்கும் மகனை ஆசீர்வதிக்குமாறு அழைப்பிதழ்கள் அச்சிட்டு கிராம மக்கள் 700 பேருக்கு வழங்கினார். வீட்டில் மதிய விருந்துக்கு ஏற்பாடு செய்து சைவ, அசைவ உணவு வகைகளை பரிமாறி தடபுடலாக விழா எடுத்துவிட்டார். மகனை வாழ்த்த வந்தவர்கள் பேனா, பென்சில், புத்தகங்கள், வாட்சுகள் போன்ற பரிசுபொருட்களை வழங்கி ஆசீர்வதித்திருக்கிறார்கள்.

ரஜப் அலி மகன் படிப்பு விஷயத்தில் தீவிர கவனம் செலுத்துவதற்கு அவருடைய கடந்தகால வாழ்க்கைக் கனவு காரணமாக இருக்கிறது.

‘‘நான் டாக்டருக்கு படிக்க விரும்பினேன். ஆனால் வீட்டின் வறுமை சூழல் அதற்கு இடம் கொடுக்கவில்லை. என்னுடன் பிறந்தவர்கள் 6 பேர். எங்களுக்கு மூன்று வேளை உணவு கிடைப்பதற்கே என் தந்தை சிரமப்பட்டார். அதனால் அவரால் எங்களை படிக்க வைக்க முடியவில்லை. நான் மூன்றாம் வகுப்புடன் பள்ளிப்படிப்பை கைவிட்டுவிட்டேன். என் தந்தையுடன் சேர்ந்து விவசாய பணிகளில் ஈடுபட தொடங்கிவிட்டேன். என் அப்பா அனுபவித்த கஷ்டங்களை உடனிருந்து பார்த்திருக்கிறேன். என்னை மாதிரி இல்லாமல் என் பிள்ளைகள் நன்றாக படித்து கவுரவமான வேலை பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். என் மகன் என்னுடைய கனவுகளை நனவாக்கிவிடுவான் என்ற நம்பிக்கை இருக்கிறது. என் மகன் நன்றாக படிக்கிறான்.அவன் நிறைய மதிப்பெண் பெற்றுவிட்டால் கிராமத்தினர் அனைவருக்கும் இனிப்பு வழங்க முடிவு செய்திருக்கிறேன். என்னுடைய அழைப்பை ஏற்று கிராம மக்கள் பரிசுகள் வாங்கி வந்து என் மகனை வாழ்த்தி இருக்கிறார்கள். பரிசு ஒரு விஷயமல்ல. அவர்களுடைய மனப்பூர்வமான ஆசீர்வாதம் கிடைக்க வேண்டும் என்பதுதான் முக்கியமானது. அது கிடைத்திருப்பதாக உணர்கிறேன்’’ என்கிறார்.

10-ம் வகுப்பு தேர்வெழுதியிருக்கும் மகனை ஆசீர்வதிக்க அழைப்பிதழ் அச்சடித்து விருந்து வைபவம் நடத்தியிருக்கும் சம்பவம் பலதரப்பினரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. சமூகவலைத்தளங்களில் விவசாயி ரஜப் அலிக்கு பாராட்டுக்கள் குவிந்து கொண்டிருக்கிறது.

அந்த கிராமத்தை சேர்ந்த ஆசிரியர் சூஷன்தா, ‘‘நான் எட்டு ஆண்டுகளாக இங்கு ஆசிரியராக பணியாற்றுகிறேன். தேர்வு எழுதுபவர்களுக்கு கிராம மக்கள் ஆசீர்வாதம் வழங்குவதை இதுவரை பார்த்ததில்லை. கேள்விப்பட்டதும் இல்லை. இது தனித்துவமான நிகழ்வாக இருக்கிறது’’ என்கிறார்.

மேலும் செய்திகள்