புலிகள் நீச்சலடிக்கும் சுந்தரவனம்

பெயருக்கேற்றார் போல் வனப்புடன் இயற்கையின் எழில்மாறா பசுமைப் பிரதேசமாக காட்சியளிக்கும் வனப்பகுதி.

Update: 2018-04-01 04:23 GMT
- சுந்தரவனம்!

பெயருக்கேற்றார் போல் வனப்புடன் இயற்கையின் எழில்மாறா பசுமைப் பிரதேசமாக காட்சியளிக்கும் வனப்பகுதி. இது வங்காளதேசம்-இந்தியாவின் எல்லைப்பகுதியில், மேற்கு வங்காளத்தின் பர்கனா மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. இந்த வனம் இரு நாடுகளும் சொந்தம் கொண்டாடும் சொர்க்கபுரியாக திகழ்கிறது. இந்த காடு யுனோஸ்கோவின் பாரம்பரிய பட்டியலில் இடம்பிடித்து உலக சுற்றுலாப் பயணிகளின் கவனத்தையும் ஈர்த்துக் கொண்டிருக்கிறது. உலகின் அழகான வனங்களில் ஒன்றான சுந்தரவனத்தில் பார்த்து ரசிக்க ஏராளமான அம்சங்கள் உள்ளன.

அடர்ந்த இந்த காட்டுக்குள் ராயல் பெங்கால் டைகர் என்று அழைக்கப்படும் கம்பீரமான 250-க்கும் மேற்பட்ட புலிகள் உலா வருகின்றன. புலிகள் நடந்துசெல்வதை பல காடுகளில் பார்த் திருக்கலாம். அவை நீந்தி செல்வதை காண்பது அபூர்வமானது, அந்த அற்புத காட்சியை சுந்தரவனத்தில் காணலாம். புலிகள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு ஆற்றில் நீந்திச் செல்லும் அழகுக்காட்சியை காண சுற்றுலாப் பயணிகள் மணிக்கணக்கில் காத்திருப்பார்கள். அந்த காட்சியில் அழகோடு கொஞ்சம் ஆபத்தும் கலந்திருக்கிறது.

அந்த காட்டை சுற்றி வாழும் மக்கள் புலிகளுக்கு பயந்து வாழ்கிறார்கள். புலிகள் ஊருக்குள் புகுந்துவிடக்கூடாது என்ற அச்சத்தில் காடுகளின் வழிப்பகுதிகளில் நாலாபுறமும் வலையால் வேலி போட்டிருக்கிறார்கள். ஆனாலும் புலியால் தாக்கப்பட்டு அந்த பகுதியில் பலர் இறந்திருக்கிறார்கள். பெரும்பாலானவர்களுக்கு புலிகளுடன் மல்லுக்கட்டி உயிருக்கு போராடி மீண்டு வந்த அனுபவம் இருக்கிறது.

‘வீடுகளில் வளர்க்கும் ஆடு, மாடுகளை கொன்று தின்பதற்காக புலிகள் மோப்பம் பிடித்து வீடு தேடி வந்து விடும். அவைகளுக்கு பயந்து இரவு நேரத்தில் கால்நடைகளை வீட்டுக்குள்ளேயே கட்டிப் போட்டு வைத்துக் கொள்வோம். இரவில் பிராணிகள் வித்தியாசமாக அலறினால் அந்த பகுதியில் புலி எங்கோ அருகில் இருக்கிறது என்று அர்த்தம். உயிரை கையில் பிடித்துக் கொண்டு வீட்டுக்குள் பதற்றத்துடன் அமர்ந்திருப்போம். இருண்ட புதருக்கு மறு பக்கத்திலிருந்து இரண்டு கண்கள் மட்டும் வெளிச்சமாக தெரியும். அது புலிதான் என்பதை யூகிப்பதற்குள் பாதி உயிர் போய் விடும்’ என்று புலிகளுடனான தங்கள் போராட வாழ்க்கையை கிராம மக்கள் திகிலுடன் விவரிக்கிறார்கள்.

எந்த இடத்திலெல்லாம் புலி நடமாட்டம் இருக்கிறது என்பதை கிராம மக்கள் துல்லியமாக கண்டுபிடித்து விடுகிறார்கள். அந்த பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகளை பத்திரமாக அழைத்துச் செல்வதும் இவர்கள் தான். அந்த பகுதியில் உள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் புலிகளை நன்றாகவே புரிந்துவைத்திருக்கிறார்கள். ‘உண்மையில் புலிகள் கூச்ச சுபாவம் கொண்டவை. மனிதர்களை சந்திக்க விரும்பாது. அதனால்தான் புலிகளை பார்க்கவரும் சுற்றுலாப் பயணிகள் பல மணி நேரம் காத்திருந்துவிட்டு, பார்க்க முடியாமல் ஏமாற்றத்தோடு திரும்புகிறார்கள். நாங்கள்தான் புலிகள் இருக்கும் இடத்தை கண்டறிந்து, பயணிகளுக்கு காட்டுகிறோம். அதிக மனித நடமாட்டம் தெரிந்தால் புலிகள் குகையிலேயே பதுங்கி இருக்கும். பசித்தால் மட்டுமே வேட்டையாட வெளியே வரும். சுந்தரவனத்தின் பெருமையே இந்தப் புலிகள்தான்’ என்கிறார்கள், கிராமவாசிகள்.

(சுந்தரவனம் என்ற பெயர் வந்ததற்கு, அங்கு சுந்தரி என்ற மரம் வளர்ந்திருப்பதுதான் காரணம் என்று சொல்கிறார்கள். அந்த மரங்கள் காடுகளின் நாலாபுறமும் வளர்ந்து நிற்கிறது)

புலிகள் தவிர அங்கு வேறு பல வனவிலங்குகளும் வசிக்கின்றன. குட்டை வால் குரங்கு, மான், காட்டுப் பன்றி, காட்டுப் பூனை, காட்டு சேவல் போன்ற பலவற்றையும் பார்த்து ரசிக்கலாம். பல்வேறு வெளிநாட்டுப் பறவைகள் சங்கமிக்கும் வனமாகவும் இது விளங்குகிறது. சைபீரிய நாட்டு பறவைகள் அதிக அளவில் இங்கு வந்து தங்கும். வெகு தூரத்திலிருந்து இமயமலைச் சிகரங்களை கடந்து வரும் பறவைகளின் அழகு சுற்றுலாப் பயணிகளின் கண்களை வெகுவாக கவரும்.

சுற்றுலாப் பயணிகள் பயமின்றி வனப்பகுதியின் அழகை ரசித்து பார்ப்பதற்கும், படம் பிடித்து மகிழ்வதற்கும் பல்வேறு இடங்களில் டவர்கள் அமைக்கப்பட்டுள்ளது. வான் பகுதியில் பறந்துவரும் பறவைகளை பார்க்கவும் நீர்நிலைகளின் அழகைக்கண்டு ரசிக்கவும், தூரத்தில் வரும் புலிகளை காணவும் அந்த உயர் கோபுரங்கள் பயன்படுகின்றன. அவற்றுள் சஜன் கேலி வாட்ச் டவர், சுத்தன்யா கேலி, தோபங்கி, புரீர் டாபரி, நேத்திதோ பாணி, போணி கேம்ப், ஜிங்கே கேலி போன்றவை குறிப்பிடத்தக்கவை.

அபூர்வமான பறவை இனங்களை பார்த்து ரசிக்கும் ஆர்வம் கொண்டவர்கள் சஜன்கேலி உயர்கோபுரத்திற்கு செல்கிறார்கள். வெளிநாட்டுப் பறவைகள் பலவித வண்ணங்களில் காட்சி தந்து வனப்பகுதியை அலங்கரிப்பதை அந்த கோபுரத்தில் இருந்து பார்க்கலாம்.

பலவிதமான மீன்களும், நண்டு இனங்களும் அங்கே காணக்கிடைக்கின்றன. அசைவ உணவுகளை விரும்புகிறவர்கள் மீன்களை பிடித்து சமைத்து சாப்பிடலாம். அருகில் உள்ள கிராம மக்கள் மீன்களை சமைத்துக் கொடுக்கவும் செய்கிறார்கள். ஆமை களையும் இங்கு அதிகமாக காணமுடிகிறது.

விஷம் நிறைந்த ராஜ நாகம் மற்றும் பெரிய வகை மலைப் பாம்பு களையும் சுந்தரவனத்தில் கண்டு களிக்கலாம். ஒரு மலைப்பாம்பு பெரிய மானை அப் படியே விழுங்கும் காட்சியை கேமராவில் படம் பிடித்திருக்கிறார்கள். ஒரு மலைப்பாம்பு முள்ளம்பன்றியை முழுங்க நினைத்து தோல்வியில் முடிந்த சம்பவமும் நடந்திருக்கிறது. மலைப்பாம்பு முள்ளம் பன்றியை விழுங்கும்போது அதன் முட்கள் சிலிர்த்து தாறுமாறாக பாம்பின் உடலை குத்திக் கிழித்துவிட்டது. அந்த ரணத்தால் பாம்பு திணறி முள்ளம்பன்றியை விழுங்கமும் முடியாமல், வெளியே தள்ளவும் முடியாமல் பல மணிநேரம் போராடி இறுதியில் பாம்பு இறந்துபோனது. இப்படிப்பட்ட காட்சிகள் எல்லாம் அபூர்வமாக சிலரது கண்களில் சிக்கியிருக்கிறது.

நேத்திதோ பாணி வாட்ச் டவரிலிருந்து பார்த்தால் காட்டிற்குள்ளே இருக்கும் 400 வருடம் பழமையான கோவில் ஒன்றை பார்க்கலாம். அதன் கட்டுமான பாணி தொலைவில் இருந்து பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்துவிடும். அவ்வளவு அற்புதமாக இருக்கிறது.

போணி கேம்ப் என்பது சுந்தரவனத்தின் மிக உயரமான கோபுரம். அங்கிருந்து காட்டின் முழு அழகையும் கண்டு ரசிக்கலாம். சஜன் கேலியிலிருந்து இங்கு செல்ல 7 மணி நேரமாகும். எந்தெந்த இடங்களை பார்வையிடலாம் என்பதை முடிவு செய்துவிட்டு அதற்பேற்ப டவர்களை தேர்வு செய்து கொள்ளலாம்.

காட்டின் அழகை நீர்நிலைகள் வழியாக சென்றும் கண்டு களிக்கலாம். அதற்கு படகு சவாரி ஏற்றது. வெகு தூரம் சென்று காட்டின் உள் அழகை ரசிக்க மோட்டார் படகுகள் வாடகைக்கு கிடைக்கும். கோத் கேலி, சோனா கேலி என்ற இடங்களில் இருந்து படகுகள் புறப்படும். அங்கேயே உணவும் சமைத்து பரிமாறப்படுகிறது. இங்கு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால் பாட்டில் தண்ணீர் கிடைக்காது. சாப்பிட்டு விட்டு பிளாஸ்டிக் பொருட்களை தூக்கி போடவும் முடியாது. வடிகட்டிய தண்ணீர், கொதிக்க வைத்த நீர் கிடைக்கும்.

காடுகளை மட்டுமின்றி அக்கம் பக்கத்தில் அமைந்திருக்கும் கிராமங்களையும் சுற்றி பார்க்கலாம். அதற்கு சைக்கிள்கள் வாடகைக்கு கிடைக்கும். கிராம மக்களின் பொழுதுபோக்குகளையும் கண்டு ரசிக்கலாம். அதில் ஒன்று போனோ பிவி யாத்ரா என்ற பெயரில் நடக்கும் நாடகம். பெரும்பாலும் வனப் பகுதியை பற்றிய பல சுவாரசியமான தகவல்கள்தான் அந்த நாடகத்தில் இடம்பெற்றிருக்கும். அருகில் உள்ள குளங்களில் மீன் பிடித்து மகிழலாம். சுவையான நண்டுகளை சமையலாக்கி ருசிக்கலாம். சமைத்துக் கொடுக்கவும் உணவகங்கள் உள்ளது. அந்த பகுதி மக்கள் அபூர்வமான கலைப்பொருட்களையும் தயாரித்து விற்பனை செய்கிறார்கள். அவைகளையும் வாங்கி வரலாம்.

ரெயில், விமானம் மூலம் கொல்கத்தா சென்று அங்கிருந்து சுந்தரவனத்திற்கு சுலபமாக பயணிக்கலாம்.

மேலும் செய்திகள்