உஷாரய்யா உஷாரு..

அவள் 11-ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறாள். நடுத்தர வருவாய் குடும்பத்தை சேர்ந்தவள். வீட்டிற்கு ஒரே பெண். பெற்றோர் இருவரும் வேலைக்கு போகிறவர்கள்.

Update: 2018-04-01 03:15 GMT
வள் 11-ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறாள். நடுத்தர வருவாய் குடும்பத்தை சேர்ந்தவள். வீட்டிற்கு ஒரே பெண். பெற்றோர் இருவரும் வேலைக்கு போகிறவர்கள். அவள் பத்தாம் வகுப்பு படிக்கச் செல்லும்போதே அப்பாவிடம் செல்போன் வாங்கிக்கேட்டாள். அவர், கல்லூரிக்கு எப்போது போகிறாயோ அப்போது வாங்கித் தருகிறேன் என்றார். அவளும் பிடிவாதம் பிடிக்கவில்லை.

அவள் படிப்பில் சுமார் ரகம்தான். பெற்றோரும் அவள் ஓரளவு படித்து, பாஸ் பண்ணினாலே போதும் என்ற மனநிலையில்தான் இருந்தார்கள். பெற்றோருக்கு அவள் செயல்பாடுகளில் எந்த மாற்றமும் தெரியவில்லை. ஒழுங்காக பள்ளிக்கு சென்றுகொண்டிருந்தாள்.

அன்று பள்ளியில் இருந்து, அவளது தந்தையை செல்போனில் தொடர்புகொண்டார்கள்.. ‘உங்கள் மனைவியையும் அழைத்துக்கொண்டு வாருங்கள். முக்கியமான விஷயம் பேச வேண்டும்’ என்று அழைத்தார்கள். சற்று பதற்றத்தோடுதான் அவர்கள் சென்றார்கள்.

அந்த தனியார் பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு மனநல ஆலோசனை வழங்குவதற்காக ஒன்றிரண்டு ஆலோசகர்கள் பணியாற்றுகிறார்கள். அவர்களில் ஒருவரது அறைக்கு இவர்கள் இருவரும் அனுப்பப்பட்டார்கள். அங்கு மேஜையில் நிறைய பரிசு பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது. இவர்கள் மேலோட்டமாக பார்த்தபோது நிறைய பணத்தோடு கனமான ஒரு பர்ஸ், பிரபல நகைக் கடையின் மோதிரம் வைக்கும் பாக்ஸ், விலை உயர்ந்த பேனாக்கள், இன்னும் சில பொருட்களும் இருந்தன.

பெற்றோரை வரவேற்று, உட்கார வைத்த மனநல ஆலோசகர், ‘உங்கள் மகளை நீங்கள் வீட்டில் செல்லமாக எப்படி அழைப்பீர்கள்?’ என்று கேட்டார். ‘குட்டிம்மா.. என்று அழைப்போம். அவளுக்கு 16 வயது ஆகிவிட்டாலும் குழந்தைத்தனமாகத்தான் நடந்துகொள்வாள். இப்போதும் எங்களுக்கு அவள் செல்லக் குழந்தைதான்.. அதனால்தான் அப்படி அழைக்கிறோம்..’ என்று தாயார் சொன்னார்.

‘சமீப காலங்களாக உங்கள் மகளின் நடவடிக்கைகளில் ஏதாவது மாற்றம் தெரிந்ததா?’ என்று அவர் கேட்க, ‘எந்த மாற்றமும் தெரியவில்லை.. ஆனால் முன்பெல்லாம் இரவில் எங்களுக்கு முன்பாக தூங்குவதற்கு படுக்கைக்கு சென்றுவிடுவாள். இப்போது நாங்களே எதிர்பார்க்காத வகையில் இரவில் வெகு நேரம் படிக்கிறாள்..’ என்று தாயார் சற்று பெருமையோடு சொன்னார்.

தந்தை குழப்பத்தோடு மேஜையில் இருந்த பரிசுப் பொருட்களை பார்த்துக்கொண்டே இருக்க, ‘இதெல்லாம் உங்க மகளுக்கு கிடைத்ததுதான்..’ என்று ஆலோசகர் சொல்ல, தந்தை அதிர, தாயாரோ ‘உங்க பள்ளிக்கூடத்தில் மாணவிகளுக்கு தங்க நகை எல்லாம்கூட பரிசு கொடுப்பீங்களா? இவ்வளவு பரிசு வாங்கும் அளவுக்கு என் பொண்ணு என்ன சாதனை செய்தாள்..?’ என்று கேட்க, ‘சும்மா இரு.. நம்ம பொண்ணு ஏதோ தப்பு பண்ணியிருக்கு..’ என்று மனைவியின் வாயை மூட வைத்தார், கணவர்.

தாயாரின் முகத்திலும் அதிர்ச்சி தென்பட ஆலோசகர் மிக நிதானமாக ‘நான் சொல்றதை கேட்டு பயந்திடாதீங்க. நடந்தது நடந்துபோச்சு.. இனி நடக்க வேண்டியதை பார்ப்போம். உங்க மகளை ஒருத்தன் காதலிக்கிறான். அவனுக்கு 31 வயது. ஒரு ஓட்டலில் இருந்து உணவுப் பொருட்களை பெற்று வீடுவீடாக டெலிவரி செய்கிறவன். அவன்தான் இவ்வளவு பொருட்களையும் உங்கள் மகளுக்கு வாங்கிக் கொடுத்திருக்கிறான். உங்கள் மகளின் நல்ல தோழி ஒருத்தி ரகசியமாக எனக்கு இந்த தகவலை சொன்னதால், உங்கள் மகளுக்கு தெரியாமலே புத்தக பையை சோதனை போட்டோம். இத்தனை பொருளும் உங்கள் மகள் பையில் இருந்து கிடைத்தது. விசாரித்தபோது காதலன் பரிசாக தந்தது என்று ஒத்துக்கொண்டாள்..’ என்று அவர் சொன்னதும், தாயார் கண்களில் இருந்து மளமளவென கண்ணீர் வழிந்தது.

‘எப்படி அவர்கள் இருவருக்குள்ளும் தகவல் தொடர்பு நடந்துள்ளது?’ என்று தந்தை கேட்க, ஆலோசகர், தந்தையின் செல்போனை வாங்கினார். அதில் எது எதையோ துழாவியவர், ‘உங்கள் செல்போன் மூலமாகத்தான் அனைத்து தகவல் தொடர்பும் நடந்திருக்கிறது. தினமும் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரை பேசியிருக்கிறார்கள்’ என்றதும், தந்தைக்கு உச்சந்தலையில் அடித்தது போல் இருந்தது. அவர் வைத்திருந்தது ஸ்மார்ட் போன் என்றாலும் அவர் அதை பேச மட்டுமே பயன்படுத்தி வந்திருக்கிறார். இரவில் தினமும் குடித்துவிட்டு தூங்கும் பழக்கம் கொண்டவராக அவர் இருந்திருக்கிறார்.

தந்தை தூங்கப்போகும்போது அவரது அனுமதியுடனே இவள் போனை வாங்கியிருக்கிறாள். தந்தையின் போன் மூலமே தொடர்பை ஏற்படுத்தி, உறவை வலுப்படுத்தவும் செய்திருக்கிறாள்.

பரிசு பொருட்கள் திரும்ப கொடுக்கப்பட்டு, காதலன் எச்சரிக்கப்பட்டிருக்கிறான். அவளும் அவனை மறந்துவிடுவதாக உறுதி கூறியிருக்கிறாள்.

நீங்களும் குட்டிம்மா.. குட்டிம்மா என்று அழைத்து, மகள்களின் மனதை புரிஞ்சுக்காம இருந்திடாதீங்கன்னு சொல்ல வர்றோம்..!

- உஷாரு வரும்.

மேலும் செய்திகள்