கூட்டுறவு சங்கத்தேர்தலில் வேட்புமனுதாக்கல் செய்வதில் அ.தி.மு.க.வினர் இடையே மோதல் பெண் உள்பட 2 பேர் காயம்
காசிமேட்டில் கூட்டுறவு சங்கத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதில் அ.தி.மு.க.வினர் இடையே மோதல் ஏற்பட்டது.
திருவொற்றியூர்,
சென்னை காசிமேடு சூரியநாராயணசாலையில் புதுமனைக்குப்பம் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் மீனவர் கூட்டுறவு சங்க தேர்தலுக்கான வேட்பு மனு பெறப்பட்டது. இதில் தலைவர், துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் என 7 பதவிகளுக்கு வேட்பு மனுக்கள் பெறப்பட்டன.
காசிமேடு சி.ஜி.காலனி. பூங்காவனகுப்பம். வ.உ.சி.நகர், நாகூரார் தோட்டம் ஆகிய மீனவ கூட்டுறவு சங்கங்களுக்கான வேட்பு மனுதாக்கல் நடைபெற்றது. பூங்காவனகுப்பம் கூட்டுறவு சங்கத்திற்கு அ.தி.மு.க.வை சேர்ந்த ஒரு தரப்பினர் முதலில் வேட்பு மனுதாக்கல் செய்தனர். அவர்களை எதிர்த்து அதே கட்சியை சேர்ந்த மற்றொரு தரப்பினரும் வேட்பு மனுதாக்கல் செய்ய வந்தனர்.
மோதல்
ஆனால், அவர்களை முதலில் வேட்பு மனுதாக்கல் செய்தவர்கள் தடுத்தனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஒருகட்டத்தில் இருதரப்பினரும் கைகளாலும், நாற்காலிகளாலும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதில் ஒரு தரப்பை சேர்ந்த வினோத், கயல்விழி ஆகியோர் காயம் அடைந்தனர்.
இதனையடுத்து வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் சேசன்சாய் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பின்னர் போலீசார் முன்னிலையில் மற்றொரு தரப்பினர் மனுதாக்கல் செய்தனர்.
இதேபோல் வ.உ.சி நகர் மீனவர் கூட்டுறவு சங்க தேர்தலுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த சிலர் வேட்பு மனுதாக்கல் செய்ய சென்றனர். அவர்களை அ.தி.மு.க.வினர் சிலர் மனுதாக்கல் செய்ய விடாமல் தடுத்தனர். இதனால் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து காசிமேடு போலீஸ் நிலையத்தில் இருதரப்பினரும் புகார் அளித்துள்ளனர்.