குன்றத்தூரில் கடையில் பயங்கர தீ விபத்து

குன்றத்தூரில் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2018-03-31 22:30 GMT
பூந்தமல்லி, 

திருச்செந்தூரை சேர்ந்தவர் ராமலிங்கம். குன்றத்தூர், சம்பந்தம் நகர் மெயின் ரோட்டில் விறகு, ஓலைகள், மூங்கில், வைக்கோல் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் பங்குனி உத்திரம் என்பதால் கடையில் வேலை செய்யும் குமார் என்பவரை கடையில் விட்டு, விட்டு ராமலிங்கம் திருச்செந்தூர் சென்று விட்டார்.

நேற்று கடையில் இருந்த குமார் மாலையில் கடைக்குள் மின் விளக்குகளின் சுவிட்ச்சை போட்டு விட்டு வெளியே வந்து அமர்ந்திருந்தார். அப்போது கடைக்குள் வைக்கோல் வைக்கப்பட்டுள்ள இடத்தில் இருந்து அதிக அளவில் புகை கிளம்பியது.

கொழுந்து விட்டு எரிந்தது

இதையடுத்து குமார் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வைக்கோல் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்ததும் பதறியபடி ஓடி வந்தார். அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து விட்டு தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றனர் ஆனால் தீ அருகில் உள்ள ஓலைகள், கட்டைகளில் வேகமாக பரவி கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது.

இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு பூந்தமல்லி, அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை அனைத்தனர்.

இதில் கடைக்குள் இருந்த வைக்கோல், ஓலைகள், கட்டைகள் என கடையின் ஒரு பகுதி முழுவதும் தீயில் எரிந்து நாசம் ஆனது. பயங்கர தீ விபத்திற்கு காரணம் மின் கசிவா? அல்லது நாச வேலை காரணமா? என்ற கோணத்தில் குன்றத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்