குன்றத்தூர் அருகே அரசு நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் எம்.எல்.ஏ.விடம் மனு

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ. பழனி வீட்டுக்கு பொதுமக்கள் நேரில் சென்று மனு அளித்தனர்.

Update: 2018-03-31 22:15 GMT
பூந்தமல்லி, 

குன்றத்தூர் அடுத்த பூந்தண்டலம் ஊராட்சிக்கு உட்பட்ட புதுநல்லூர் பகுதியில், குன்றத்தூர்-ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலை ஓரம் அரசு நிலம் உள்ளது. தனி நபர்கள் சிலர் அந்த நிலத்தை ஆக்கிரமித்து விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பகுதி மக்கள் 40-க்கும் மேற்பட்டோர் நேற்று ஒன்று திரண்டு போரூர் அடுத்த மதனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ. பழனி வீட்டுக்கு நேரில் சென்று மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

அரசுக்கு சொந்தமான நிலத்தை தனி நபர்கள் ஆக்கிரமித்து வருகின்றனர். அந்த இடத்தை மீட்டு வறுமை கோட்டிற்கு கீழ் சொந்த வீடு, நிலம் இல்லாதவர்களுக்கு வழங்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், இல்லை என்றால் பல்வேறு போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

பொதுமக்களிடம் இருந்து மனுவை பெற்ற எம்.எல்.ஏ. பழனி சம்பவ இடத்தை பார்வையிட்டு உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்