ஓடும் ரெயிலில் பெண்ணிடம் ரூ.36 ஆயிரம் திருட்டு ஓய்வுபெற்ற ராணுவ வீரர் கைது

சேலம் அருகே ஓடும் ரெயிலில் பெண்ணிடம் ரூ.36 ஆயிரம் திருடிய ஓய்வுபெற்ற ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-03-31 22:28 GMT
சூரமங்கலம்,

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் ஜெயக் குமார். இவருடைய மனைவி மகேஸ்வரி(வயது39). இவர் பெங்களூருவில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். உறவினர் ஒருவருடைய திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மகேஸ்வரி தனது மகன், மகள் ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு கோவைக்கு புறப்பட்டார்.

இவர்கள் குர்லா எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவில்லா பெட்டியில் பயணம் செய்தனர். இந்த ரெயில் நேற்று அதிகாலை சேலம் அருகே வந்த போது மகேஸ்வரி தனது கைப்பையை திறந்து பார்த்தார். அப்போது அதில் வைத்திருந்த ரூ.36 ஆயிரத்தை காணவில்லை. எனவே ரெயில் சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்துக்கு வந்ததும் அவர் பணம் திருட்டு போனது குறித்து ரெயில்வே போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.

இதையடுத்து ரெயில்வே போலீசார் அந்த பெட்டிக்கு சென்று பயணம் செய்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது போலீசாரிடம் மகேஸ்வரி, தங்களுடன் நீண்ட நேரம் ஒருவர் பேசி வந்ததாகவும், அவர் மீது சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்தார். அதன்பேரில், அவர் கூறிய ஆசாமி வைத்திருந்த பையை போலீசார் சோதனையிட்ட போது, அதில் ரூ.36 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் கோவை மாவட்டம் காளப்பட்டி நேரு நகரை சேர்ந்த ராமகிருஷ்ணன்(53) என்பதும், ஓய்வு பெற்ற ராணுவ வீரர் என்பதும், மகேஸ்வரி பையில் இருந்த பணத்தை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.36 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்