திருப்பூர் மாநகரில் அதிகரிக்கும் லாட்டரி சீட்டு விற்பனை

திருப்பூர் மாநகர பகுதிகளில் அதிகரித்து வரும் லாட்டரி சீட்டு விற்பனையை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-03-31 22:20 GMT
திருப்பூர், 

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் திருப்பூருக்குட்பட்ட பகுதிகளில் தங்கி இருந்து வேலை செய்து வருகின்றனர். பின்னலாடை தயாரிப்பில் திருப்பூர் முன்னிலையில் இருந்து வரும் நிலையில், மதுவிற்பனையிலும் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த நிலையில் திருப்பூர் மாநகருக்குட்பட்ட பகுதிகளில் தொழிலாளர்களை குறிவைத்து பிற மாநில லாட்டரி சீட்டுகளும் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை லாட்டரி சீட்டு விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தொழிலாளர் களுக்கு போலியான ஆசைகளை தூண்டி அவர்களிடம் லாட்டரி சீட்டுகளை பலர் அதிக அளவில் விற்பனை செய்து வருகின்றனர்.

லாட்டரி சீட்டு விற்பனை செய்பவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து, பலரை கைது செய்து வருகின்றனர். ஆனால் மாநகரில் சில பகுதிகளில் லாட்டரி சீட்டு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இந்த லாட்டரி சீட்டுகளின் மோகத்தில் பல தொழிலாளர்கள், தொழிலதிபர்கள் சிக்கி தங்களுடைய பணத்தை இழந்து வருகின்றனர். லாட்டரி சீட்டு விற்பனை செய்பவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் சிலர் கூறியதாவது:-

நடவடிக்கை எடுக்க வேண்டும்

தமிழகம் முழுவதும் லாட்டரி சீட்டு விற்பனை செய்வதற்கு அரசு தடைவிதித்திருந்தாலும், தொழிலாளர்கள் நிறைந்த பகுதி என்பதால் திருப்பூரில் லாட்டரி சீட்டு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. பலர் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வருகின்றனர். லாட்டரி சீட்டு எண்களை மட்டும் ஒரு தாளில் எழுதி கொடுத்து டோக்கன் முறையில் விற்பனை நடக்கிறது. ஆன்லைன் மூலமாகவும் லாட்டரி சீட்டு முடிவுகளை தெரிவித்து விற்பனை செய்து வருகிறார்கள். தினந்தோறும் காலை 11 மணி முதல் லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுகிறது.

போலீசார் பெரும்பாலும் குறைந்த எண்ணிக்கையில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்பவர்களை மட்டுமே கண்டறிந்து அவர்களை கைது செய்கின்றனர். மிகப்பெரிய அளவில் லாட்டரி சீட்டு விற்பனை செய்யும் கும்பலை உடனடியாக கண்டறிந்து அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் பல தொழிலாளர்கள் குடும்பங்கள் பாதுகாக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

மேலும் செய்திகள்