8 கி.மீ தூரத்துக்கு ஆங்காங்கே குழிகள் தோண்டி பவானி ஆற்றில் மணல் திருடி விற்பனை செய்யும் கும்பல்

பவானி ஆற்றில் 8 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஆங்காங்கே குழிகள் தோண்டி மணல் திருட்டு நடைபெறுகிறது.

Update: 2018-03-31 22:20 GMT
பவானி,

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக பவானிசாகர் அணை உள்ளது. இந்த அணையில் இருந்து பவானி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. பவானிசாகரில் இருந்து சீறிட்டு புறப்படும் பவானி ஆறு, பவானி கூடுதுறையில் காவிரி ஆற்றில் கலக்கிறது. பவானிசாகரில் இருந்து பவானி கூடுதுறை வரை பவானி ஆறு பயணித்து வரும் தூரம் 70 கிலோ மீட்டர். இந்த ஆறு பாய்ந்து வரும் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அதுமட்டுமின்றி பல்வேறு கிராமங்களின் குடிநீர் தேவையையும் இந்த ஆறு பூர்த்தி செய்கிறது.

தற்போது குடிநீர் தேவைக்காக மட்டும் வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. கடும் வெயில் காரணமாக இந்த தண்ணீர் பவானி கூடுதுறையை அடையும்போது சிறிய வாய்க்கால் போன்று சுருங்கி ஓடுகிறது. இதனால் பவானி ஆறு எங்கு பார்த்தாலும் மணற்பாங்காக காணப்படும். குறிப்பாக பவானி அருகே உள்ள மூலப்பாளையத்தில் தொடங்கி எலவமலை, வைரமங்கலம், சேர்வராயன்பாளையம், பெரியமோளபாளையம், சின்னமோளபாளையம், ஜம்பை, தளவாய்ப்பேட்டை, ஒரிச்சேரி, ஆப்பக்கூடல் வரை எங்கு பார்த்தாலும் 8 கிலோ மீட்டர் தூரத்துக்கு மணல் நிறைந்து காணப்படுகிறது.

ரூ.8 ஆயிரத்துக்கு விற்பனை

இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கும்பல்கள் பவானி ஆற்றங்கரையையே முழுவதுமாக சுரண்டி மணலை திருடி விற்பனை செய்யும் தொழில் படுஜோராக நடந்து வருகிறது. இந்த கும்பல் செய்யும் தில்லாலங்கடி வேலைகளை பார்த்தால் ஆச்சரியம்தான் ஏற்படுகிறது.

அதாவது இரவு 10 மணிக்கு கடப்பாரை, மண் வெட்டி, மண் அள்ளும் சட்டி, மணல் சல்லடை ஆகியவற்றை எடுத்துக்கொண்டு கும்பல்கள் ஆற்றங்கரைக்கு வருகின்றன. இரவு நேரம் என்பதால் கும்பலை சேர்ந்தவர்கள் தலையில் ‘ஹெட்லைட்’ மாட்டி குழிதோண்ட தொடங்குகிறார்கள். விடியும் வரை தங்களால் எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் குழி தோண்டி அதில் இருந்து மணலை எடுத்து வெளியே மேடான பகுதியில் கொட்டுகிறார்கள். பின்னர் கொட்டிய மணலை சல்லடை கொண்டு சலித்து மணல் குவியலை ஏற்படுத்துவார்கள். இதையடுத்து இந்த மணல் குவியலை டிராக்டரில் ஏற்றி கொண்டு விற்பனை செய்து விடுகிறார்கள். அவ்வாறு ஏற்றப்பட்ட ஒரு டிராக்டர் மணல் ‘லோடு’ ரூ.8 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆங்காங்கே ஏராளமான குழிகள்

ஒரு சிலர் மணலை சிமெண்டு மூட்டையில் சேகரித்து குழியின் மேல்புறத்தில் வைத்து விடுகிறார்கள். அவ்வாறு இரவு சிமெண்டு மூட்டைகளில் சேர்த்து வைத்த மணலை பகலில் மோட்டார்சைக்கிள் மற்றும் மொபட்டில் வரும் கும்பல் ஏற்றிச்சென்றுதேவைப்படுபவர்களின் வீட்டுக்கே கொண்டு சென்று நேரில் ஒப்படைத்து விடுகிறது. ஒரு சிமெண்டு மூட்டை அளவிலான மணல் ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த தொழில் திட்டமிடப்பட்டு, வீடுகளுக்கே வினியோகம் செய்யக்கூடிய அளவுக்கு கனகச்சிதமாக நடைபெறுகிறது. பவானி ஆற்றில் மூலப்பாளையத்தில் தொடங்கி ஆப்பக்கூடல் வரை 8 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஆற்றங்கரையில் ஆங்காங்கே ஏராளமான குழிகள் காணப்படுகின்றன. இந்த குழிகள் 7 அடி ஆழத்துக்கு இருக்கின்றன.

மண் வளத்தை காக்க வேண்டும்

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், ‘கடும் வறட்சி காரணமாக ஆற்றில் குறைந்த அளவிலேயே தண்ணீர் வருகிறது. குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளது.

இந்த நிலையில் மணல் திருடும் கும்பல் ஆற்றின் பல இடங்களில் குழிகள் தோண்டி மணலை திருடி அள்ளி செல்வதால் நீருற்று இல்லாத தன்மையே உள்ளது. பொதுப்பணித்துறை, கனிமவளத்துறை, வருவாய்த்துறை போன்ற பல்வேறு துறை அதிகாரிகளின் கண்களிலேயே மண்ணை தூவி மணல் திருடப்படுவது வேதனைக்குரிய விஷயம் ஆகும். ஒவ்வொன்றுக்கும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி தான் தீர்வு காண வேண்டும் என அதிகாரிகள் நினைக்கக்கூடாது. இதுபோன்ற குற்ற நடவடிக்கைகளை அதிகாரிகள் தடுத்து பவானி ஆற்றின் மண் வளத்தை பாதுகாக்க வேண்டும்,’ என்றனர். 

மேலும் செய்திகள்