சந்தையூர் சுவர் பிரச்சினை போராட்டம்: இறந்தவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல், 160 பேர் கைது

பேரையூர் சந்தையூரில் சுவர் பிரச்சினை குறித்து போராட்டம் நடத்தியவர்களில் ஒருவர் இறந்தார். அவரது உடலை வாங்க மறுத்து உசிலம்பட்டியில் சாலைமறியல் செய்த 160 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-03-31 23:00 GMT
உசிலம்பட்டி,

பேரையூர் சந்தையூரில் உள்ள சுற்றுச்சுவரை அங்குள்ள ஒருபிரிவினர் தீண்டாமைச்சுவர் எனவும், அதனை அகற்ற கோரியும் கடந்த ஜனவரி மாதம் 30-ந்தேதியிலிருந்து மலையில் குடியேறி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் பழனிமுருகன்(வயது 42) என்பவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு பேரையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார். அதைத்தொடர்ந்து அவரின் உடல் உசிலம்பட்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்தநிலையில் நேற்று இறந்த வரின் உறவினர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் இறந்தவர் உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனை முன்பு பேரையூர்-உசிலம்பட்டி சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். பழனிமுருகன் உயிரிழப்புக்கு காரணம் மாவட்ட நிர்வாகம் தான் எனவும், ஆகையால் கலெக்டர் மீது நடவடிக்கை எடுக்ககோரியும், தீண்டாமைச்சுவரை அகற்ற கோரியும் கோஷமிட்டபடி ஆண்களும், பெண்களும், சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் போராட்டக்காரர்கள் மறுத்து விட்டதால், போலீசார் வலுக்கட்டாயமாக அனைவரையும் கைது செய்தனர். இதனால் ஒருமணிநேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதில் 46 பெண்கள் உட்பட 160 பேரை கைது செய்து, அருகில் உள்ள ஒரு திருமண மகாலில் தங்க வைக்க போலீஸ் வாகனத்திலிருந்து இறக்கிவிடப்பட்டனர். ஆனால் அவர்கள் மதுரை-தேனி மெயின் சாலையில் மீண்டும் திடீரென அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். மேலும் போராட்டக்காரர்கள் போலீஸ் வேனின் கண்ணாடியை உடைத்தனர். அதைத் தொடர்ந்து போலீசார் அனைவரையும் மீண்டும் கைது செய்தனர்.

போராட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை நிறுவன தலைவர் அதியமான், ஆதித்தமிழர்கட்சி நிறுவன தலைவர் ஜக்கையன், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் சரீப், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரஜினி, புரட்சி புலிகள் கட்சி தலைவர் திலீபன், பறையர் புலிப்படை நிறுவனர் மின்னல் வரதன் ஆகியோர் தொண்டர்களுடன் கைதாகினர். பாதுகாப்பு பணியில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கல்யாணகுமார், பரசிவம், இன்ஸ்பெக்டர்கள் குருவெங்கட்ராஜ், ரமாராணி உள்பட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

மேலும் செய்திகள்