மறையூர் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது, உடந்தையாக இருந்த தாயும் சிக்கினார்

மறையூர் அருகே, பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை போலீசார் கைது செய்தனர். இதற்கு உடந்தையாக இருந்த தாயும் சிக்கினார்.

Update: 2018-03-31 21:30 GMT
மூணாறு,

மறையூரை அடுத்துள்ள காந்தலூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண், திருச்சூர் பகுதியில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது கணவரை பிரிந்து வசித்து வருகிறார். இவருடைய மகள் மறையூர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகிறார்.

மாணவியின் தாய்க்கும் அவர் வேலை பார்க்கும் இடத்தில் சந்தோஷ் (வயது 39) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்தநிலையில் இவர் பள்ளியில் படிக்கும் தனது மகளை வடகாஞ்சேரிக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த சந்தோசுடன் அப்பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் அறை எடுத்து 3 பேரும் தங்கியுள்ளனர். அப்போது சந்தோஷ், அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. சந்தோசிடம் இருந்து தப்பித்த அந்த மாணவி தனது தாயாரிடம் இதுகுறித்து தெரிவித்து உள்ளார். ஆனால் அவருடைய தாய், சந்தோசை கண்டிக்காமல் மாணவியை வீட்டுக்கு அழைத்து சென்றுவிட்டார்.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட அந்த மாணவி சோகமாக இருந்துள்ளார். சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற மாணவி, சோகமாகவே இருந்துள்ளார். இதைக்கண்ட வகுப்பு ஆசிரியர், மாணவியிடம் விசாரணை செய்துள்ளார். அப்போது சந்தோஷ் பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து அந்த மாணவி கூறி அழுதுள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர், குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர்கள் மறையூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மாணவியின் தாயாரை மறையூரிலும், சந்தோசை திருச்சூர் அடுத்துள்ள குன்னம்குளம் பகுதியிலும் வைத்து கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அவர்கள் 2 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்