குற்றவாளிகளை அடையாளம் காண போலீசாருக்கு புதிய செயலி அறிமுகம்

குற்றவாளிகளை அடையாளம் காண புதுவை போலீசாருக்கு புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை போலீஸ் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம் தொடங்கிவைத்தார்.

Update: 2018-03-31 22:15 GMT
புதுச்சேரி,

புதுவை காவல்துறை தலைமையகத்தில் குற்றவாளிகளை அடையாளம் கண்டுகொள்வதற்காக போலீசாருக்கு செல்போன்களில் ‘பேஸ் டிராக்’ என்ற புதிய செயலி அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் புதுவை போலீஸ் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம் கலந்துகொண்டு ‘பேஸ் டிராக்’ செயலியை தொடங்கிவைத்தார்.

அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுவை போலீசார் குற்றவாளிகளை எளிதாக அடையாளம் கண்டுகொள்வதற்காக ‘பேஸ் டிராக்’ என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள 7,500 ரவுடிகள், இளம் குற்றவாளிகள் ஆகியோரின் புகைப்படங்கள், குற்ற மாதிரிகள் உள்ளிட்டவற்றை புதுச்சேரி காவல்துறை சேகரித்து புதிய செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதில் காவல்துறையின் குற்றப்பதிவேடுகளில் உள்ள குற்றவாளிகளின் புகைப்படம் மற்றும் குற்றவாளிகள் தொடர்பான இதர தகவல்களை ஒப்பீடு செய்து இந்த செயலி மூலம் குற்றவாளிகளை கண்டுபிடித்து விடலாம். எளிதில் விசாரணை நடத்த முடியும்.

புதுச்சேரியை சேர்ந்த குற்றவாளிகளை அடையாளம் காண்பதும் மட்டுமின்றி தமிழக அரசின் அனுமதிபெற்று தமிழகத்தை சேர்ந்த 60 ஆயிரம் குற்றவாளிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு இந்த செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி காவல் தலைமையகத்தில் இருந்து அதிகாரிகள் இந்த செயலின் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிப்பார்கள். இந்த செயலியை யாரும் தவறான முறையில் பயன்படுத்த முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்