சிவசுப்பிரமணியர் கோவிலில் விநாயகர் தேரோட்டம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

கம்பைநல்லூர் சிவசுப்பிரமணியர் கோவிலில் பங்குனி உத்திர விழாவையொட்டி விநாயகர் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2018-03-31 22:30 GMT
மொரப்பூர்,

தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூரில் சிவசுப்பிரமணியர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திர தேர்த் திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் சாமிக்கு சிறப்பு வழிபாடு மற்றும் அலங்கார சேவை நடைபெற்றது. பின்னர் பல்வேறு வாகனங்களில் சாமி திருவீதி உலா நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பால்குட ஊர்வலமும், வள்ளி, தெய்வானை சமேத சிவசுப்பிரமணிய சாமிக்கு திருக்கல்யாண விழாவும் நடந்தது. பின்னர் தோரண வாயிலில் ஊஞ்சல் சேவையும், மயில் வாகனத்தில் சாமி திருவீதி உலாவும் நடைபெற்றது.

விநாயகர் தேரோட்டம்

இதைத்தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான விநாயகர் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து முக்கிய வீதிகள் வழியாக இழுத்து சென்றனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை சிவசுப்பிரமணியர் தேரோட்டமும், நாளை (திங்கட்கிழமை) வேடர்பறி உற்சவமும் நடக்கிறது.

நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மஞ்சள் நீராடுதலும், கொடியிறக்கமும், பிச்சாண்டி திருவிழாவும் நடக்கிறது. வருகிற 4-ந்தேதி சயனோற்சவமும், 5-ந்தேதி வசந்த உற்சவமும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை செங்குந்த மரபினர், விழாக்குழுவினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்து உள்ளனர். 

மேலும் செய்திகள்