பத்திரப்பதிவில் பழைய முறைக்கு அனுமதி அளித்ததற்கு எழுத்தர்கள் வரவேற்பு

பத்திரப்பதிவில் பழைய முறைக்கு அனுமதி அளித்ததற்கு எழுத்தர்கள் வரவேற்றுள்ளனர்.

Update: 2018-03-31 22:45 GMT
கரூர்,

பத்திரப்பதிவில் ஆன்-லைன் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் பத்திரங்கள் பதிவுசெய்வதற்கு தாமதம் ஏற்படுவதாகவும், சில நேரங்களில் சர்வர் கோளாறால் பத்திரங்கள் பதிய பல மணி நேரம் காத்திருக்க வேண்டியிருப்பதாகவும், பழைய முறை நடைமுறையில் இருக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பிலும், பத்திர எழுத்தர்கள் தரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. மேலும் பத்திர எழுத்தர்களும் வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்த நிலையில் பத்திரப்பதிவு துறை தலைவர் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் பத்திரங்களை ஆன்-லைனில் பதியும்போது ஏதேனும் சிரமங்கள் ஏற்பட்டால் பழைய முறைப்படி பதிவு செய்யலாம் எனவும், பழைய முறைப்படி பதிவு செய்ய பொதுமக்கள் விரும்பினாலும், அதில் பதியும் படியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பத்திர எழுத்தர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

கொண்டாடினர்

கரூரில் மேலக்கரூர் சார்பதிவாளர் அலுவலகம் முன்பு நேற்று பத்திர எழுத்தர்கள் சங்க தலைவர் சஞ்சீவி தலைமையில் நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் கொண்டாடினர். மேலும் பத்திரங்கள் பதிவு செய்ய வந்திருந்த பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். பத்திர எழுத்தர்கள் சங்க செயலாளர் சைமன் கூறுகையில், “கரூர் மாவட்டத்தில் 11 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளது. பத்திரங்களை பழைய முறைப்படி எழுத்தர்கள் பூர்த்தி செய்து பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பத்திரங்கள் பதிய கூடுதல் நேரம் செலவாகாது. குறிப்பிட்ட நேரத்திற்குள் பத்திரங்களை பொதுமக்கள் பதிவு செய்ய முடியும். அலுவலர்களுக்கும் சிரமங்கள் இருக்காது” என்றார். 

மேலும் செய்திகள்