காவிரி மேலாண்மை வாரியம்: அரசியல் சட்டத்தின்படி பிரதமர் செயல்படாதது துரதிர்ஷ்டவசமானது திருநாவுக்கரசர் பேட்டி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் அரசியல் சட்டத்தின்படி பிரதமர் நரேந்திர மோடி செயல்படாதது துரதிர்ஷ்டவசமானது என்று திருநாவுக்கரசர் கூறினார்.

Update: 2018-03-31 21:00 GMT
கோவில்பட்டி,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் அரசியல் சட்டத்தின்படி பிரதமர் நரேந்திர மோடி செயல்படாதது துரதிர்ஷ்டவசமானது என்று திருநாவுக்கரசர் கூறினார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கோவில்பட்டியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

மோசடியான அறிவிப்பு

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட பின்னரும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல், மத்திய அரசு தமிழகத்துக்கு துரோகம் செய்து வருகிறது. தமிழக அரசும் 6 வாரம் தூங்கி விட்டு, தற்போது உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்து உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லையெனில், அ.தி.மு.க. எம்.பி.க்கள் தூக்குப்போட்டு தற்கொலை செய்வதாக மோசடியாக விளம்பரம் செய்தனர். அதேபோன்று அ.தி.மு.க.வின் உண்ணாவிரத போராட்டமும் ஒரு மோசடியான அறிவிப்பு ஆகும். இதனால் எந்தவித நன்மையும் ஏற்பட போவதில்லை.

தமிழகத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தில் எடுத்த முடிவுகளை மத்திய அரசு மதிக்கவில்லை. அரசியல் சட்டத்தின்படி பிரதமர் நரேந்திரமோடி செயல்படாதது துரதிர்ஷ்டவசமானது. தமிழகத்தின் நலன் காவு கொடுக்கப்பட்டு உள்ளது. பொதுமக்களை பாதிக்கும் நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நடைபயணம் மேற்கொண்டு உள்ளார். அதனை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதில் நானும் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினேன். வைகோவின் நடைபயணம் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

ராஜினாமா

மக்களின் நலன் கருதி, நியூட்ரினோ திட்டத்தை கைவிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன். தூத்துக்குடியில் 25 ஆண்டுகளாக செயல்படும் ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே அந்த தொழிற்சாலைக்கு எதிராக பொதுமக்கள் தீவிரமாக போராடி வருகின்றனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எம்.பி.க்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம். அவர்கள் தங்களது பதவிகளை மட்டும் ராஜினாமா செய்தாலே போதுமானது. மத்திய அரசு, மாநில அரசை கண்டு கொள்ளாமல் புறக்கணிப்பது சரியல்ல. மத்திய, மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.

உற்சாக வரவேற்பு

முன்னதாக, திருநாவுக்கரசருக்கு கோவில்பட்டியை அடுத்த சாலைப்புதூரில் வடக்கு மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமையில், காங்கிரசார் உற்சாக வரவேற்பு அளித்தனர். மாவட்ட தலைவர்கள் முரளிதரன் (தூத்துக்குடி மாநகரம்), ஜெயகுமார் (தெற்கு), மாவட்ட செயலாளர் காமராஜ், மாவட்ட துணை தலைவர்கள் திருப்பதி ராஜா, பங்காருசாமி, நகர தலைவர் சண்முகராஜா, பொதுக்குழு உறுப்பினர்கள் சபரி ஆனந்த், பொன்னுசாமி பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்