காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி 6-ந் தேதி உண்ணாவிரத போராட்டம் ஜி.கே.வாசன் பேட்டி

திருச்சியில் 6-ந் தேதி த.மா.கா. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று ஜி.கே.வாசன் கூறினார்.

Update: 2018-03-31 23:00 GMT
திருச்சி,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்துவது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதற்கு மாநில தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கி பேசினார். தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு பா.ஜ.க. தடையாக இருக்கிறது. இந்த பிரச்சினையில் கர்நாடக அரசு சட்டத்திற்கு சவால் விட்டுக்கொண்டு உள்ளது. இதை மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி சென்னையில் நாளை (திங்கட்கிழமை) த.மா.கா. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். வருகிற 4-ந்தேதி டெல்டா மாவட்டங்களில் கையெழுத்து இயக்கம் நடத்த உள்ளோம்.

இதில் இளைஞர்கள், மாணவ-மாணவிகள் கலந்துகொள்ள வேண்டும். மாணவ-மாணவிகள் பிரதமர் மோடி அலுவலகத்திற்கு இந்த பிரச்சினை குறித்து கோடிக்கணக்கில் இ-மெயில் அனுப்பி எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும். நம் எதிர்ப்பை பிரதமர் மோடி நேரடியாக தெரிந்துகொள்ள இது ஒரு வாய்ப்பாக இருக்கும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, 6-ந்தேதி திருச்சியில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். இந்த பிரச்சினையில் மத்திய அரசு 3 மாத காலம் அவகாசம் கேட்டதை விவசாயிகள் எதிர்பார்த்து இருக்கமாட்டார்கள். 2 தேசிய கட்சிகளும் நாடகமாடுகிறது என்று மக்கள் நினைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

விவசாயிகளை பிரித்து பார்க்காமல், அனைவரையும் ஒரே மாதிரியாக பார்க்க வேண்டும். தேசிய கட்சிகள் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் இருக்க கூடாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை தேசிய பிரச்சினையாக பிரதமர் கருத வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் தலைமை நிலைய செயலாளர் அசோகன், துணை தலைவர் ஞானதேசிகன், திருச்சி மாவட்ட செயலாளர்கள் நந்தா கே.செந்தில்வேல் (மாநகர்), குணா (தெற்கு), ரவீந்திரன் (வடக்கு), மாநில நிர்வாகிகள் கே.டி.தனபால், தர்மராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்