மருத்துவ தர்மம் மலருமா?

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி. அளவான உணவு, தூய்மையான குடிநீர், நடைபயிற்சி, உழைப்பு, நல்ல தூக்கம், நல்ல மனம் போன்ற எளிய வழிகளில் செலவில்லாமல் ஆரோக்கியமான வாழ்வை பெற முடியும்.

Update: 2018-03-31 06:30 GMT
ரசாயன மருந்துகள்

இன்று நோய்களுக்கு முக்கிய காரணமாக இருப்பது நோய் கிருமிகளை தவிர ரசாயன மருந்துகளும்தான். ரசாயன மருந்துகளை நாம் உட்கொள்ளும் போது பக்க விளைவுகள் ஏற்பட்டு புதிய, புதிய நோய்களுக்கு இரையாகிறோம். ரசாயன மருந்துகள் பெரிய கம்பெனிகளால் உற்பத்தி செய்யப்படுகின்றன.

விளம்பர வினியோக பிரதிநிதிகள் மருத்துவர்களை அணுகி பல சலுகைகள், பரிசுகளை வழங்கிவிட்டுப்போகிறார்கள். இதனால் டாக்டர்கள் அவற்றையே பரிந்துரைக்கின்றனர். அந்த மருந்து மட்டுமே சுற்று வட்டார பகுதிகளில் கிடைக்கும். அந்த மருந்து கம்பெனிகளின் மாய வலையில் நாம் அகப்பட்டு கொள்கிறோம். இந்த மருந்துகள் பல நோய்களுக்கும் கருவாக அமைந்து ஆயிரக்கணக்கானோரின் உயிரிழப்புகளுக்கும் காரணமாக அமைந்துவிடுகின்றன.

ஜெனரிக் மருந்துகள்

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சூரத்தில் ஒரு மருத்துவமனை விழாவில் பிரதமர் மோடி பேசும் போது, ‘அரசு மருத்துவர்கள் மருந்து எழுதுவதை ஒரு சட்ட விதிகளுக்குள் கொண்டு வரும் எண்ணத்தில் இருக்கிறோம். அலோபதி மருத்துவர்கள் மருந்து சீட்டில் எழுதிக் கொடுக்கும் மருந்துகள் பிரபல நிறுவனங்களின் தயாரிப்புகளின் பெயர்களாக இருக்கின்றன. எழுத்துகள் புரியாத வகையிலும் இருக்கின்றன. அதற்குப் பதிலாக ஜெனரிக் (மருந்துப்பொருட்களின் மூலக்கூறு) பெயரில் தெளிவான எழுத்துகளால் புரியும்படி எழுத வேண்டும்’ என்றார்.

இதைத்தொடர்ந்து இந்திய மருத்துவ கவுன்சில் ஏற்கனவே இருக்கும் விதிகளை சுட்டிக்காட்டி மருத்துவர்கள் ஜெனரிக் மருந்துகளை எழுதுமாறு சுற்றறிக்கை அனுப்பியது. 2014-ம் ஆண்டு இறுதியில் தெலுங்கானாவைச் சேர்ந்த ஒரு மருந்தாளுனர் டாக்டர் எழுதி கொடுத்த எழுத்தை மாற்றி புரிந்துகொண்டு வேறு தவறான மருந்துகளை வழங்கிய வழக்கில் தீர்ப்பு கூறிய ஆந்திர உயர் நீதிமன்றம், டாக்டர்கள் கண்டிப்பாக ஜெனரிக் மருந்துகளை எழுத வேண்டும். பெரிய (கேபிடல்) எழுத்துகளால் புரியும் விதமாக எழுத வேண்டும் என்று ஆணையிட்டது.

மருந்து எழுத ஆலோசனை

அரசு, நீதித்துறை, இந்திய மருத்துவ கவுன்சில் ஆலோசனைப்படி மருத்துவர்கள் மருந்து எழுதுகிறார்களா? என்றால் இல்லையே. ஒருசில மருத்துவர்கள் மருந்துகளின் பெயரை ‘டைப்’ செய்து கொடுக்கிறார்கள். கார்பரேட் மருத்துவமனைகள் கலர் கலராக லெட்டர் பேடுகளில் ‘டைப்’ செய்து கொடுக்கிறார்கள்.

மருத்துவர்களை கேட்டால், நாங்கள் ஜெனரிக் எழுதினால் மட்டமான மருந்து கம்பெனியின் மருந்துகளை கொடுத்துவிடுவார்கள் என்று கருதிவிடுவார்கள் என்று சொல்வது உண்மையாக இருக்கலாம். அப்படியென்றால் மட்டமான மருந்துகள் விற்பவர்கள் எப்படி பிழைக்கிறார்கள்? அதை எழுதும் டாக்டர்கள் இருப்பதால்தானே?

மருந்து கடைகள் நஷ்டத்தில் இயங்கியதாக சரித்திரம் இல்லை. சில்லரை வியாபாரம், மொத்த வியாபாரத்தில் யாருக்கும் நஷ்டம் வருவதில்லை. மருந்து கம்பெனி தொடங்குவதில் கடினம் இருப்பதில்லை. சில லட்சங்கள் இருந்தால் போதும். தயாரிப்பதும் வினியோகமும் ஒன்றாய் வைத்திருக்கும் கம்பெனிகள் முதலீடு அதிகம். இதில் பன்னாட்டு நிறுவனங்களும் அடக்கம்.

குறைவான வரி

வினியோகம் மட்டும் பார்க்கும் கம்பெனிகள் புற்றீசல் மாதிரி ஏராளம். இவர்கள் வேண்டிய மருந்துகளை குறைந்தவிலையில் தயாரிப்பாளர்களிடம் பெற்று 200 அல்லது 300 சதவீதத்துக்கு அதிகமாக லாபம் வைத்து விற்பார்கள். நம்மூரில் தயாரித்தால் வரி அதிகம். மேகாலயா, நாகாலாந்து, மிசோரம் போன்ற இடங்களில் வரி மிகவும் குறைவு. புதுச்சேரியும் இதில் ஒருவகையில் அடக்கம்.

இத்தனைக்கும் தயாரிக்கப்படும் மருந்துகளின் தரத்தை பரிசோதிக்க மருந்துக்கட்டுப்பாடு துறை ஒன்று இருக்கிறது. அங்கு ஆய்வாளர்களும் இருக்கிறார்கள். அரசுத்துறை வேறு என்ன சொல்வது...?

டாக்டர்களுக்கு பேனா முதல் தனிப்பட்ட தேவைகள் வரை அத்தனையையும் மருந்து கம்பெனிகள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ செய்து கொடுக்கின்றன.

தரம் குறைந்த மருந்துகள்

அனைத்து டாக்டர்களும் தவறானவர்களோ, வேண்டுமென்றே தரம் குறைவான மருந்துகளை எழுதுபவர்களோ அல்ல. 75 சதவீதம் சூழ்நிலைகள் அப்படி மாற்றுகிறது. வேலைப்பளு நிறைந்த நிலைகளில் புதிதாக ஒரு மருந்து மார்க்கெட்டுக்கு வருகிறது என்றால் அது தொடர்பான முழு விவரங்களையும் படிப்பதற்கு நேரம் இருப்பதில்லை. மருந்து விற்பனை பிரதிநிதிகள் கொண்டு வந்து கொடுக்கும் தகவல் அட்டைகளை முழுவதும் படிப்பதற்கு, அதுவும் சிறிய எழுத்துகளை படிப்பதில் பொறுமை இருப்பதில்லை.

புத்தகங்கள் மூலம் சந்தேகங்களை களைவதில்லை. மருத்துவர்கள் கூட்டத்தில் இதுபற்றி விவாதிப்பதில்லை. மருத்துவக்கல்லூரிகளில் இருக்கும் ஆசிரியர்கள் பங்களிப்பு அனைத்து மருத்துவர்களுக்கும் சேர்வதில்லை. ஒரு டாக்டர் எழுதும் மருந்துகளின் பெயர் அடுத்த மருத்துவருக்கு தெரியாமல் இருப்பது (பெரும்பாலும்) மிகவும் வருந்தத்தக்க விஷயம். ஒரு ஜெனரிக் பெயருக்கு பல்வேறு கம்பெனிகள் பல்வேறு பெயர்களை பயன்படுத்தி மருந்துகளை விற்பனை செய்கிறார்கள்.

அதே வேளையில், அனைத்து மருந்துகளையும் ஜெனரிக் பெயரில் தமிழிலேயே அனைவரும் அறியும் வகையில் அரசு மருத்துவமனைகளில் அளிப்பது தமிழக அரசு செய்யும் மிகப்பெரும் சேவை.

மருந்து சீட்டு இன்றி...

சமீபகாலமாக மூக்கடைப்புக்கு, இடுப்பு வலிக்கு இந்த மருந்தை பயன்படுத்துங்கள் என்று விளம்பரங்கள் வருகின்றன. ஆனால் அந்த மருந்துகளை தொடர்ந்து பயன்படுத்தினால், வேறு வியாதிகள் வரும். இவ்வாறு, அடிக்கடி மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்து எடுத்தால் கிட்னி செயலிழப்பும் ஏற்படும்.

மருந்து கடைகளில் டாக்டர்கள் இருப்பதில்லை. இருக்க வேண்டிய மருந்தாளுனர்கள் இருப்பதில்லை. குறைந்த படிப்பு படித்தவர்கள் மருந்துகளை மருந்து சீட்டுகள் இல்லாமல் கொடுத்து மருந்துகளின் தரங்களை குறைத்து வருகிறார்கள். பல மருந்து மாதிரி சீட்டுகளை பார்த்த அனுபவத்தில் மருந்துகளை எடுத்துக்கொடுக்கிறார்கள்.

எந்த நாட்டிலும் மருந்து சீட்டு இல்லாமல் மருந்துகளை வாங்க முடியாது. ஏன் மருந்து கடைகளில் மக்கள் நேரடியாகப் போய் வைத்தியம் கேட்கிறார்கள்? அரசு மருத்துவமனை குறைபாடுகள், டாக்டர்கள் பற்றாக்குறை, தனியார் மருத்துவரிடம் போனால் செலவு அதிகம் என்பதால்தான். இதனால் மருந்து கடைகளில் வியாபாரமும், லாபமும் அதிகம்.

மருத்துவ தர்மம்

ஜெனரிக் மருந்துகளை மட்டுமே எழுத வேண்டும். அடைப்புக்குறிக்குள் பிரபல நிறுவனங்களின் தயாரிப்புகளின் பெயர்களை எழுதலாம்.கேபிடல் எழுத்தில் மட்டுமே எழுத வேண்டும் என்று சட்டம் வர வேண்டும். டைப் அடிக்க முடிந்தவர்கள் செய்யட்டும்.

இதில், இந்திய மருத்துவ கழகம் தனிக்கவனம் செலுத்தி ஒவ்வொரு மாதாந்திரக் கூட்டத்திலும் இது பற்றி கருத்துகளை பேசவேண்டும். மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ ஆசிரியர்கள் தனி கவனம் செலுத்த வேண்டும். பயிற்சி மருத்துவர்கள், பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் ஜெனரிக் மருந்துகளை எழுத பணிக்க வேண்டும். மருந்து மாத்திரைகளை விளம்பரம் மூலமாக விற்பனை செய்வதை நிறுத்த வேண்டும்.

அப்போதுதான் மருத்துவ தர்மம் மலரும்.

 - டாக்டர் யேசுதாஸ்

மேலும் செய்திகள்