பங்குனி உத்திரத்தையொட்டி கோபி பச்சமலை முருகன் கோவில் தேரோட்டம்
பங்குனி உத்திரத்தையொட்டி கோபி பச்சமலை முருகன் கோவிலில் தேரோட்டம் நடந்தது.
கடத்தூர்,
கோபி பச்சமலையில் பிரசித்திபெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பங்குனி உத்திர தேர் திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு சண்முகருக்கு சிவப்பு சாத்தும் நிகழ்ச்சியும், 10 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், மாலை 4 மணிக்கு மயில் வாகன காட்சியும், 5 மணிக்கு தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும், 6 மணிக்கு சாமிக்கு வெள்ளை சாத்துதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
முக்கிய நிகழ்ச்சியான பங்குனி உத்திர பூஜை நேற்று காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து 7.30 மணிக்கு திருப்படி பூஜையும், 8 மணிக்கு சண்முகருக்கு பச்சை சாத்துதல் நிகழ்ச்சியும் நடந்தது. பின்னர் சாமிக்கு பால், பன்னீர் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது ஏராளமான பக்தர்கள் பன்னீர் காவடி, புஷ்ப காவடி எடுத்து கோவிலுக்கு வந்து தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். இதையொட்டி பக்தர்களுக்கு மலையடிவாரத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.
தேரோட்டம்
பின்னர் மாலை 4 மணிக்கு தேரோட்ட நிகழ்ச்சி தொடங்கியது. அப்போது பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் முருகன் அருள்பாலித்தார். இதைத்தொடர்ந்து தேரை வடம் பிடித்து பக்தர்கள் இழுத்து சென்றனர். தேரானது மலையை சுற்றி வலம் வந்து நிலையடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.
இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு பவுர்ணமி கிரிவலமும், பரிவேட்டை மற்றும் குதிரை வாகன காட்சியும், மாலை 6.30 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத சண்முகப்பெருமான் மலர் பல்லக்கில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி அளவில் மஞ்சள் நீர் உற்சவத்துடன் கோவில் விழா நிறைவடைகிறது. இதேபோல் பவளமலை முத்துக்குமாரசுவாமி கோவில், மூலவாய்க்கால் முருகன் கோவில், கருங்கரடு முருகன் கோவில், கோபி கடைவீதி முருகன் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது.
அந்தியூர்
இதேபோல் அந்தியூரை அடுத்த ஆப்பக்கூடலில் பாலதண்டாயுதபாணி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஏராளமான ஆண் மற்றும் பெண் பக்தர்கள் அங்குள்ள பவானி ஆற்றுக்கு சென்று பால் குடம் மற்றும் தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து வந்து தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர். ஊர்வலம் கோவிலை வந்தடைந்ததும் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் முருகன் அருள்பாலித்தார்.
இதில் அந்தியூர், அத்தாணி, கவுந்தப்பாடி, பெருந்தலையூர், ஜம்பை, வேம்பத்தி, வெள்ளாளபாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கொடுமுடி- அறச்சலூர்
பங்குனி உத்திரத்தையொட்டி கொடுமுடி மகுடேசுவரர் கோவிலில் உள்ள முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். மேலும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கொடுமுடி காவிரி ஆற்றுக்கு வந்து தீர்த்தம் மற்றும் காவடி எடுத்து பழனி முருகன் கோவிலுக்கு சென்றனர்.
அறச்சலூர் நாகமலை தீர்த்தக்குமாரசாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி அறச்சலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த பக்தர்கள், கொடுமுடி காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து மலைப்படிகளில் ஏறி கோவிலுக்கு வந்தனர். இதைத்தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடைபெற்றது.
பின்னர் உற்சவர் சிலை அங்குள்ள தேரில் வைக்கப்பட்டது. இதையடுத்து தேரோட்டம் நடந்தது. கோவில் வளாகத்தை தேர் சுற்றி வந்ததும் சாமிக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையொட்டி மலையடிவாரத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பங்குனி உத்திர விழாக்குழு, தைப்பூச விழாக்குழு மற்றும் சஷ்டி விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
அம்மாபேட்டை
அம்மாபேட்டை மீனாட்சி உடனமர் சொக்கநாதர் கோவிலில் உள்ள சுப்பிரமணியசாமிக்கு நேற்று திருக்கல்யாண பங்குனி உத்திரத்தையொட்டி உற்சவம் நடைபெற்றது. அப்போது சாமிக்கு பால், தயிர், இளநீர், திருமஞ்சனம், சந்தனம் மற்றும் பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
இதில் அம்மாபேட்டை, நெரிஞ்சிப்பேட்டை, சிங்கம்பேட்டை, பூதப்பாடி, பூனாச்சி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமியை தரிசனம் செய்து சென்றனர்.
இதேபோல் கவுந்தப்பாடி ராஜேஸ்வரி புதுமாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள பாலமுருகனுக்கு பக்தர்கள் பால் குடம் மற்றும் காவடி எடுத்து ஊர்வலமாக வந்தார்கள். பின்னர் சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மாலை 5 மணிக்கு உற்சவர் புஷ்ப பல்லக்கில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.