வேலூர் கிறிஸ்தவ ஆலயங்களில் புனிதவெள்ளி சிறப்பு பிரார்த்தனை

புனித வெள்ளிக்கிழமையை முன்னிட்டு வேலூரில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2018-03-30 22:15 GMT
வேலூர்,

கிறிஸ்தவர்களின் ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை ‘குருத்தோலை ஞாயிறாக அனுசரிக்கப்பட்டது. நேற்று புனிதவெள்ளி கடைபிடிக்கப்பட்டது. ஏசுநாதர் வெள்ளிக்கிழமை சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார் என்றும், 3-ம் நாள் உயிரோடு எழுந்தார் என்றும் கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் கூறப்பட்டுள்ளது.

அவர் சிலுவையில் அறைந்த தினம் புனித வெள்ளி என்றும், பெரிய வெள்ளி என்றும் அழைக்கப்படுகிறது. ஏசுநாதர் சிலுவையை தூக்கி கொண்டு செல்லும் போதும், சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட நேரத்திலும் 7 திருவசனங்களை கூறினார் என்று பைபிளில் கூறப்பட்டுள்ளது. அந்த வசனங்களை அடிப்படையாக வைத்து நேற்று தேவாலயங்களில் பிரசங்கம் நடைபெற்றது.

வேலூர் விண்ணரசி மாதா ஆலயத்தில் நேற்று காலை 7 மணிக்கு சிலுவைப்பாதை வழிபாடு நடந்தது. அப்போது பிஷப் சவுந்தரராஜிலு, முதன்மைகுரு ஸ்டீபன், ஆலய அதிபர் லூர்துசாமி மற்றும் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு ஆலய வளாகத்தில் சிலுவையை சுமந்து சென்றனர். மாலையில் சிலுவை ஆராதனை நடந்தது.

அதேபோல் வேலூர் ஓல்டுடவுனில் உள்ள ஆரோக்கியஅன்னை ஆலயத்திலும் புனிதவெள்ளி கடைபிடிக்கப்பட்டது. பங்குதந்தை எட்வர்டு தலைமையில் கிறிஸ்தவர்கள் சிலுவையை சுமந்தபடி முக்கிய தெருக்கள் வழியாக சென்றனர். உத்திரமாதா கோவிலில் இருந்து ஆரோக்கியமாதா கோவில் வரை 14 இடங்களில் சிலுவை பாதை வைத்து பிரார்த்தனை நடத்தினார்கள். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

வேலூர் கோட்டை எதிரே உள்ள சி.எஸ்.ஐ. மத்திய ஆலயத்தில் பிஷப் ராஜவேலு தலைமையில் காலை 11.30 மணிக்கு பிரசங்கம் தொடங்கியது. பின்னர் ஆராதனையும், சிறப்பு பிரார்த்தனையும் நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

சத்துவாச்சாரியில் உள்ள சூசையப்பர் ஆலயத்திலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. மேலும் 14 இடங்களில் சிலுவை பாதை வழிபாடும் நடந்தது. தோட்டப்பாளையத்தில் உள்ள அருளானந்தர் ஆலயத்தில் கிறிஸ்தவர்கள் புதுகுடியான் சத்திர தெருவில் இருந்து சிலுவை தூக்கி கொண்டு ஆலயத்தை வந்தடைந்தனர்.

இதே போல் வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை, திருப்பலி நடந்தது.

மேலும் செய்திகள்