கடை பூட்டை உடைத்து பணம், கைக்கெடிகாரங்கள் திருட்டு

கடையின் பூட்டை உடைத்து விலை உயர்ந்த கைக்கெடிகாரங்கள் மற்றும் ரூ.1 லட்சத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2018-03-30 21:41 GMT
தாம்பரம்,

சென்னை தாம்பரத்தை அடுத்த சேலையூர் அருகே உள்ள ராஜகீழ்ப்பாக்கம், மேத்தா நகரை சேர்ந்தவர் ரமேஷ், தொழில் அதிபர். இவருடைய மனைவி வீணா(வயது 49). இவர் மகாலட்சுமி நகரில் கைக்கெடிகாரங்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வீணா கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்.

அவர் நேற்று காலை கடையை திறக்க வந்தபோது கதவில் இருந்த பூட்டுகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடையின் உள்ளே சென்று பார்த்தபோது, விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த விலை உயர்ந்த கைக்கெடிகாரங்கள், பணப்பெட்டியில் இருந்த ரூ.1 லட்சம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச்சென்று இருப்பது தெரிந்தது.

கேமரா பதிவுகள்

இதுகுறித்து வீணா அளித்த புகாரின்பேரில் சேலையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மர்மநபர்கள் கடையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் பதிவாகும் கருவிகளையும் எடுத்துச் சென்றுவிட்டது தெரிந்தது.

அந்த கடையின் மேல் தளத்தில் உள்ள தனியார் பல் மருத்துவமனை மற்றும் அருகில் உள்ள செல்போன் கடை ஆகியவற்றில் உள்ள கண் காணிப்பு கேமராவிலும் தங்கள் உருவம் பதிவாகி இருக்கும் என்பதால் அவற்றின் ஷட்டரையும் உடைத்து உள்ளே இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் பதிவாகும் கருவிகளையும் தூக்கிச்சென்றுள்ளனர்.

போலீஸ் விசாரணை

அந்த பகுதியில் உள்ள மற்றொரு கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில், அந்த கடையின் முன் ஒரு ஆட்டோவும், ஒரு டெம்போவும் வந்து நிற்பதும், திருட்டு சம்பவத்துக்கு பிறகு புறப்பட்டு செல்வதும் பதிவாகி உள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்