புனித அந்தோணியார் ஆலயத்தில் இருந்து கருணை மாதா மலைக்கு திருச்சிலுவை பயணம்

துண்டத்துவிளை புனித அந்தோணியார் ஆலயத்தில் இருந்து கருணை மாதா மலைக்கு திருச்சிலுவை பயணம் நேற்று நடைபெற்றது. இதில் திரளானோர் பங்கேற்றனர்.

Update: 2018-03-30 21:40 GMT
கருங்கல்,

கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலத்தின் இறுதி வாரத்தை புனித வாரமாக கடைப்பிடிப்பது வழக்கம். அதன்படி இந்த வாரம் புனித வாரமாக கடைப்பிடிக்கப்பட்டது. இதன்ஒரு பகுதியாக, பெரிய வியாழனையொட்டி பாதம் கழுவும் நிகழ்ச்சி குமரி மாவட்ட கிறிஸ்தவ தேவாலயங்களில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இயேசு சிலுவை பாடுகளை அனுபவித்து உயிர் துறந்த தினம் புனிதவெள்ளியாக கிறிஸ்தவர்களால் கடைப்பிடிக்கப்பட்டது.

புனிதவெள்ளியான நேற்று, கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. ஆண்டுதோறும் புனிதவெள்ளியன்று, கருங்கல் துண்டத்துவிளை புனித அந்தோணியார் ஆலயத்தில் இருந்து புனித கருணை மாதா மலையை நோக்கி திருச்சிலுவை பயணம் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, இந்த ஆண்டு 38-வது திருச்சிலுவை திருப்பயணம் நேற்று நடைபெற்றது. இதனையொட்டி, காலை 7 மணிக்கு துண்டத்துவிளை ஆலய வளாகத்தில் இருந்து திருச்சிலுவை திருப்பயணம் புறப்பட்டு கருங்கல் சந்திப்பு, தபால் நிலையம், சிந்தன்விளை வழியாக கருணை மாதா மலை அடிவாரத்தை அடைந்தது. இதில் ஒருவர் இயேசுவை போல் வேடம் அணிந்து சிலுவையை சுமந்து வந்தார்.

இந்த திருப்பயணத்தில் இயேசுவின் பாடுகளின் 14 நிலைகளையும் நினைவு கூறும் வகையில் ஆலய நாடக கலைஞர்கள் தத்ரூபமாக நடித்து காட்டினர். வழிநெடுகிலும், இயேசுவின் சிலுவைபாடு பாடல்கள் பாடியபடி ஏராளமான பங்குமக்கள் ஊர்வலத்தில் கலந்துகொண்டனர். திருப்பயணத்தின் இறுதியில் மலை அடிவாரத்திலும், மலை உச்சியிலும் நேர்ச்சையாக கஞ்சி வழங்கப்பட்டது.

இயேசுவின் கல்வாரி பயணத்தில் கலந்துகொள்ளும் உணர்வினை ஏற்படுத்தும் இந்த பயணத்தில் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., தேவ் மற்றும் குமரி மாவட்டம் மட்டுமல்லாமல் பிற மாவட்டங்களில் இருந்தும் வந்த கிறிஸ்தவர்கள் திரளானோர் பங்கேற்றனர்.

இதற்கான ஏற்பாடுகளை குழித்துறை மறைமாவட்ட குருகுல முதல்வர் ஜேசுரெத்தினம், செயலாளர் ரசல்ராஜ், துண்டத்துவிளை ஆலய பங்குத்தந்தை பீட்டர், இணை பங்குத்தந்தை ஆல்பின் ஜோஸ், துணைத்தலைவர் வில்லியம், செயலாளர் ரெக்ஸ்லின் விஜி, துணை செயலாளர் செல்வன் ஜெஸ்ரின், பொருளாளர் ஜெகன் ததேயுஸ், பணிவன்பன் வின்சென்ட், மற்றும் மறைமாவட்ட, வட்டார அருட்பணியாளர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்