12 உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்க திட்டம்

கோடங்கிபட்டி உள்பட 6 இடங்களில் 12 உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Update: 2018-03-30 22:30 GMT
கரூர்,

கரூர்- திருச்சி, மதுரை- சேலம் ஆகிய தேசிய நெடுஞ்சாலைகளில் கரூர் பகுதியில் அணுகு சாலை சந்திப்புகளில் இரவு நேரங்களில் அடிக்கடி விபத்துகள் நடந்து உயிரிழப்பு ஏற்படுகிறது. இரவு நேரத்தில் போதிய வெளிச்சம் இன்மையால் விபத்து ஏற்பட காரணம் எனவும், உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோடங்கிபட்டி, மதுரை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அய்யம்பாளையம், ராம்நகர், ஆண்டாங்கோவில், கருப்பம்பாளையம் ஆகிய இடங்களில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவது தெரியவந்தது.

இதைதொடர்ந்து மேற்கண்ட இடங்களில் உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்க தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று முன்தினம் இரவு அந்தந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.

இது குறித்து அவர் கூறுகையில், “கோடங்கிபட்டி உள்பட 6 இடங்களில் தலா 2 உயர் கோபுர மின் விளக்குகள் என மொத்தம் 12 எண்ணிக்கையில் ரூ.50 லட்சம் செலவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும்” என்றார். விளக்குகள் அமைப்பதன் மூலம் போதிய வெளிச்சம் தெரியும். இதன் மூலம் தேசிய நெடுஞ்சாலையை அணுகுசாலையில் இருந்து வாகனங்கள் கடந்து செல்லும்போது விபத்துகள் குறைய வாய்ப்பு உள்ளது. ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்