பாளையங்கோட்டையில் வாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியவர் கைது

பாளையங்கோட்டையில் வாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-03-30 20:30 GMT
நெல்லை,

பாளையங்கோட்டையில் வாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

வாளால் கேக் வெட்டி...

சென்னையில் பிரபல ரவுடி பினு தனது பிறந்தநாள் விழாவை ரவுடிகளுடன் கொண்டாடினார். அப்போது அரிவாளால் ‘கேக்‘ வெட்டி கொண்டாடினர். அப்போது போலீசார் பல ரவுடிகளை கைது செய்தனர். இந்த நிலையில் பாளையங்கோட்டையில் ஒரு வாலிபருக்கு பிறந்த நாள் விழா நடந்தது.

அந்த விழாவில் அவருடைய ஆதரவாளர்கள் வாளால் ‘கேக்‘ வெட்டி கொண்டாடினர். இந்த படங்கள் ‘வாட்ஸ்-அப்‘பில் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து நெல்லை மாநகர போலீசார் வாளால் ‘கேக்‘ வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் மீது ஏதேனும் வழக்குகள் உள்ளதா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் பாளையங்கோட்டை மனகாவலன்பிள்ளைநகர் பகுதியை சேர்ந்த கார்த்திக் பாண்டியன், தனது நண்பர்களுடன் சேர்ந்து வாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியது தெரியவந்தது. அவர்களை போலீசார் தேடிவந்தனர்.

2 பேர் கைது


இந்த நிலையில், பாளையங்கோட்டை பெருமாள் மேலரதவீதியை சேர்ந்த மகாராஜன் (வயது30). இவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர் சம்பவத்தன்று பாளையங்கோட்டை பகுதியில் நடந்து வந்து கொண்டு இருந்தாராம். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த கார்த்திக் பாண்டியனும், அவருடைய நண்பர் செந்தில்குமாரும் (24), மகாராஜன் மீது மோட்டார் சைக்கிளை இடித்து உள்ளனர். இதை தட்டிக்கேட்ட மகாராஜனை, அவர்கள் 2 பேரும் சேர்ந்து அரிவாளால் வெட்டிக்கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று கார்த்திக் பாண்டியன், செந்தில்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களது உறவினர்கள் போலீஸ் நிலையம் திரண்டு வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்