குளத்துக்குள் மினி பஸ் பாய்ந்து முதியவர் பலி; 48 பேர் காயம்

திருத்துறைப்பூண்டி அருகே குளத்துக்குள் மினிபஸ் பாய்ந்து முதியவர் ஒருவர் பலியானார். 48 பேர் காயம் அடைந்தனர். மற்றொரு பஸ்சை முந்திச்செல்ல முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டது.

Update: 2018-03-30 22:45 GMT
திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இருந்து கள்ளிக்குடி, பாண்டி வழியாக எக்கல் வரை ஒரு மினி பஸ் தினசரி இயக்கப்படுகிறது. நேற்று காலை எக்கலில் இருந்து புறப்பட்ட இந்த மினி பஸ்சில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பஸ்சை எக்கலை சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் காமராஜ்(வயது 24) ஓட்டி வந்தார். கண்டக்டராக ஆய்மூரை சேர்ந்த முத்தரசன் இருந்தார். நெடும்பலம் மாரியம்மன் குளம் அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மினி பஸ், குளத்துக்குள் பாய்ந்தது.

உடனே பஸ்சில் இருந்த பயணிகள் அய்யோ... அம்மா... என்று அலறினர். குளத்தில் தண்ணீர் அதிகமாக இருந்ததால் அனைவரும் தத்தளித்தனர். இதனைப்பார்த்து அருகில் இருந்த பொதுமக்கள் அங்கு ஓடி வந்து தண்ணீரில் தத்தளித்த பயணிகளை மீட்டு வாகனங்கள் மூலம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு குன்னலூரை சேர்ந்த வேலாயுதம்(60), சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் 48 பயணிகள் காயம் அடைந்தனர். இதில் 15 பேர் மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி தீயணைப்பு நிலைய அலுவலர்(பொறுப்பு) நடராஜ் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மினிபஸ்சை கிரேன் மூலம் மீட்டனர். மேலும் திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி, இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தபத்மநாதன், அகிலாண்டேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் கபிலன் ஆகியோர் அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மினிபஸ் டிரைவர் எக்கலை சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் காமராஜை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக பயணிகளை ஏற்றி சென்றதும், மற்றொரு மினிபஸ்சை முந்திச்செல்ல முயன்றபோது அந்த பஸ் மோதியதால் மினிபஸ், குளத்துக்குள் பாய்ந்ததும் தெரிய வந்தது.

மேலும் செய்திகள்