கைலாசநாதர் கோவில் தேரோட்டம்

காரைக்காலில் கைலாசநாதர் கோவில் பிரம்மோற்சவத்தையொட்டி நேற்ற தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

Update: 2018-03-30 00:14 GMT
காரைக்கால்,

காரைக்காலில் உள்ள பிரசித்திபெற்ற சுந்தராம்பாள் சமேத கைலாசநாதர் கோவிலில் கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் பிரமோற்சவ விழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி தினமும் காலை பஞ்சமூர்த்திகள் அபிஷேகமும், மாலையில் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலாவும் நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை 9.30 மணிக்கு தேரோட்டம் நடந்தது. விழாவில் அசனா எம்.எல்.ஏ., கோவில்கள் நிர்வாக அதிகாரி விக்ராந்த் ராஜா, போலீஸ் சூப்பிரண்டு மாரிமுத்து, கோவில் அறங்காவல் குழு தலைவர் கேசவன், துணைத் தலைவர் ஆறுமுகம், பொருளாளர் ரஞ்சன் கார்த்திகேயன், உறுப்பினர் பிரகாஷ் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

காரைக்கால் பாரதியார் வீதியில் உள்ள காரைக்கால் அம்மையார் கோவில் எதிரில் உள்ள தேரடியில் இருந்து புறப்பட்ட தேர் கென்னடியார் வீதி, மாதா கோவில் வீதி, லெமேர் வீதி வழியாக வலம் வந்து மீண்டும் பாரதியார் கோவில் வீதியாக சென்று மாலையில் தேரடியை சென்றடைந்தது.

இன்று (வெள்ளிக்கிழமை) காலை காரைக்கால் அம்மையார் திருக்குளத்தில் தீர்த்தவாரியும், 1-ந் தேதி தெப்பத் திருவிழாவும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவல் குழுவினர் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்