தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நாளை திருவள்ளூர் வருகிறார்
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நாளை(சனிக்கிழமை), திருவள்ளூருக்கு வருகிறார்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி, விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், நாளை(சனிக்கிழமை) திருவள்ளூருக்கு வருகை தர உள்ளார்.
கவர்னரின் வருகையையொட்டி, பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கொடுக்க விரும்பினால் இன்று(வெள்ளிக் கிழமை) திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மக்கள் குறை தீர்க்கும் கூட்ட அரங்கில் தனியாக சிறப்பு கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு மனுக்கள் வாங்கப்படும்.
அந்த மனுக்கள் முறையாக பதிவு செய்யப்பட்டு, ஒப்புகை சான்று வழங்கப்படும். இந்த மனுக்கள் தமிழக கவர்னரிடம் நேரடியாக கொடுக்கப்பட்ட மனுக்களாக பரிசீலிக்கப்படும்.
மக்கள் பிரதிநிதிகள்
நாளை(சனிக்கிழமை) மாலை 5 மணி முதல் 6.15 மணிவரை திருவள்ளூரில் உள்ள மாவட்ட சுற்றுலா மாளிகையில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் மக்கள் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் கோரிக்கை மனுக்கள் அளிக்க விருப்பம் உள்ளவர்களை நேரடியாக சந்தித்து மனுக்களை பெற உள்ளார்.
எனவே திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள், கவர்னரிடம் கோரிக்கை மனுக்களை வழங்க விரும்பினால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.